டெல்லி: மத்திய பல்கலைக்கழகங்களில் முதுநிலை பொறியியல் படிப்பில் சேருவதற்கான ‘கேட் 2026’ நுழைவுத்தேர்வுக்கு வருகிற 28-ந்தேதி முதல் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டு உள்ளது.
GATE (Graduate Aptitude Test in Engineering) என்பது பொறியியல், கட்டிடக்கலை மற்றும் அறிவியலில் முதுகலை படிப்புகளில் சேர நடத்தப்படும் தேசிய அளவிலான தேர்வாகும். இந்திய அறிவியல் கழகம் (IISc) மற்றும் ஏழு இந்திய தொழில்நுட்ப நிறுவனங்களால் (IITs) சுழற்சி முறையில் தேர்வு நடத்தப்படுகிறது.

ஐ.ஐ.டி. உள்பட மத்திய அரசின் உயர்கல்வி நிறுவனங்களில் எம்.இ., எம்.டெக்., எம்.எஸ்., எம்.ஏ. ஆகிய முதுநிலை படிப்புகளில் சேருவதற்கு தேசிய அளவிலான ‘கேட்’ நுழைவுத் தேர்வு நடத்தப்படுகிறது. இந்த தேர்வை ஐ.ஐ.டி. கல்வி நிறுவனங்கள் நடத்துகின்றன. இது நுழைவுத்தேர்வாக மட்டுமன்றி இஸ்ரோ உள்ளிட்ட பொதுத்துறை நிறுவனங்களில் பணிக்கு சேருவதற்கும் இதில் பெரும் மதிப்பெண்கள் எடுத்துக்கொள்ளப்படுகிறது.
அதன்படி, நடப்பாண்டுக்கான, ‘கேட் 2026’ நுழைவுத்தேர்வு என்ஜினீயரிங், தொழில்நுட்பம், அறிவியல் மற்றும் சமூக அறிவியல் உள்ளிட்ட 30 பாடங்களுக்கு நடத்தப்படுகிறது. ஒரு தேர்வர் ஒன்று அல்லது இரண்டு தாள்கள் தேர்வை தேர்வு செய்து எழுதலாம்.
இந்த தேர்வை எழுத குறைந்தபட்ச தகுதியாக, என்ஜினீயரிங் இளநிலை பட்டப்படிப்பு, கலை மற்றும் அறிவியலில் இளங்கலை பட்டப்படிப்பு மூன்றாம் ஆண்டு அல்லது இறுதி ஆண்டு படிக்கும் மாணவர்கள் மற்றும் பட்டப்படிப்பை முடித்தவர்கள் எழுத முடியும்.
இதற்கான ஆன்லைன் விண்ணப்ப திவு வருகிற 28-ந்தேதி தொடங்குகிறது. முன்னதாக இன்று முதல் விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்ட நிலையில், தேதி மாற்றம் செய்யப்பட்டுள்ளது. விண்ணப்பிப்பதற்கான கடைசி நாள் அடுத்த மாதம் (செப்டம்பர்) 26-ந் தேதி ஆகும்.
விண்ணப்பிக்க விரும்புபவர்கள் www.gate 2026.iitg.ac.in என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம். இதற்கான தேர்வு அடுத்த ஆண்டு (2026) பிப்ரவரி மாதம் 7, 8 மற்றும் 14, 15-ந் தேதிகளில் நடைபெற இருக்கிறது.
