பெரிய திருவடியை மிஞ்சிய சிறிய திருவடி
மகாவிஷ்ணு, ராமனாக அவதரித்தபோது, அவருக்கு உதவி செய்தவர்கள் பலர். அப்படி உதவி செய்தவர்களில் முதன்மையானவராக இருந்து, ராமனுடனேயே தன்னை ஐக்கியமாக்கிக் கொண்டவர் அனுமன்.
மகாபாரதத்தில் வரும் அர்ச்சுனன்- கிருஷ்ணனின் நட்பைப் போன்றது, ராமாயணத்தில் வரும் அனுமன்- ராமரின் நட்பு.
ராமரின் மூலமாக வாலிக்கும் சுக்ரீவனுக்கும் இருந்த பகையை முடிவுக்குக் கொண்டு வந்தார். இலங்கையில் சிறை வைக்கப்பட்டிருந்த சீதையைக் கண்டு வந்து ராமருக்கு ஆறுதல் அளித்தார். அசோக வனத்தில் இருந்த சீதையால் சிரஞ்சீவியாக இருப்பாய் என்று ஆசீர்வதிக்கப்பட்டவர் அனுமன். ராவணனுடனான யுத்தத்தில் இந்திரஜித் செலுத்தி அம்புபட்டு மூர்ச்சையான லட்சுமணனைக் காப்பாற்றுவதற்காகச் சஞ்சீவி மலையைப் பெயர்த்து எடுத்துக் கொண்டு வந்தார். 14 ஆண்டுகள் வனவாசம் முடிந்து ராமர் வரத் தாமதமானதால், தீக்குளிக்கச் சென்ற பரதனைக் காற்றை விட வேகமாகச் சென்று தடுத்து நிறுத்திக் காப்பாற்றினார்.
ராமாயணம் முடிந்து மகாபாரத காலம் வந்தது. அப்போது நடந்த குருசேத்திர யுத்தத்தில் கிருஷ்ணர் ஓட்டிய தேரின் மேல் கொடியாக இருந்து அனைத்து பாரங்களையும் தாங்கிக்கொண்டிருந்தவர் அனுமன்.
இப்படிப் பல பெருமைகளைக் கொண்ட அனுமனை, மகாவிஷ்ணு தனது வாகனமான கருடனுக்கு அடுத்த நிலையில் வைத்திருந்தார். அதனால் இவரை மகாவிஷ்ணுவின் சிறிய திருவடியாகக் கூறுவர்.
அதே சமயம் கருடாழ்வாருக்குக் கிடைக்காத ஒரு பெருமையும் அனுமனுக்குக் கிடைத்தது. அதாவது பெரிய திருவடியான கருடனுக்கு இல்லாத அளவில் தனிக் கோவில்கள் அனுமனுக்குப் பல அமைந்திருக்கின்றன.