சென்னை: கால்வாய்களில் குப்பைகளை கொட்டினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என சென்னை  மாநகராட்சி எச்சரிக்கை விடுத்துள்ளது.

சென்னையில் ஓடும் பங்கிங்காம் கால்வாய் உள்பட பல கால்வாய்களில் பொதுமக்கள், நிறுவனங்கள், குப்பைகளை கொட்டுவதும், கட்டிட கழிவுகளை கொட்டுவதும் வாடிக்கையாக உள்ளது. இதனால், மழைக்காலங்களில் மழைநீர் செல்ல முடியாத நிலை ஏற்பட்டு வருகிறது. இதை தடுக்க மாநகராட்சி பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

இந்த நிலையில்,  கடந்த வாரம் பெய்த கனமழையால் சென்னையின் பல இடங்களில் தண்ணீர் தேங்கியது. அது உடனே அகற்றப்பட்டது. ஆனால், வடசென்னையில் பல இடங்களில் தண்ணீர் தேங்கியது. அதை அகற்றுவதில் சிரமம் ஏற்பட்டது. வடசென்னையின் பிரதான கால்வாயான, ஓட்டேரி நல்லான் கால்வாயில் மழைநீர் செல்லாததால் சர்ச்சையை எழுந்தது.

இதையடுத்து, அந்த கால்வாய் பகுதியை அமைச்சர்கள், அதிகாரிகள் ஆய்வு செய்தனர். அப்போது, குப்பைகளால் ஓட்டேரி நல்லான் கால்வாயில் அடைப்பு ஏற்பட்டு தண்ணீர் செல்லாதது தெரிய வந்தது. அதைத்தொடர்ந்து, கால்வாயை தூர்வார சென்னை மாநகராட்சி முடிவு செயது. அதற்கான பணிகள்  தொடங்கி நடைபெறு வருகிறது.

இந்த நிலையில், சென்னையில், கூடுதல் தலைமை செயலாளர் சிவ் தாஸ் மீனா தலைமையில் நடைபெற்ற பருவமழை தொடர்பான ஆய்வுக் கூட்டத்தில், கால்வாய் அடைப்பு குறித்து விவாதிக்கப்பட்டது. கால்வாயில் கொட்டப்படும் கழிவுகள் குறித்து கேள்வி எழுப்பிய கூடுதல் தலைமை செயலாளர், குப்பை கொட்டுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என அறிவுறுத்தினார். அதைத்தொடர்ந்தது, கால்வாய்களில் குப்பைகளை கொட்டுபவர்களுக்கு கடுமையான அபராதம் விதிக்க சென்னை மாநகராட்சி முடிவெடுத்துள்ளது.

இதுதொடர்பாக கூறிய அதிகாரிகள், கால்வாய்களிலோ, நீர்நிலைகள் மற்றும் நீர்வழித்தடங்களில் பிளாஸ்டிக் போன்ற கழிவுகளை கொட்டுவதை பொதுமக்கள் தவிர்க்க வேண்டும். மீறும் நபர்களின் மீது திடக்கழிவு மேலாண்மை விதிகளின்படி, தீவிர நடவடிக்கை மேற்கொள்ளப்படும். கால்வாய் மற்றும் மழைநீர் வடிகால்களிலேயெ குப்பைகளை கொட்டுபவர்களை கண்டறித்து கடும் நடவடிக்கை எடுக்க அறிவுறுத்தப்பட்டு இருப்பதாக தெரிவித்து உள்ளனர்.