சென்னை: சென்னையில் ஜனவரி 1ம் தேதி முதல் சொத்து வரியுடன் சேர்த்து குப்பைக்கான கட்டணத்தை செலுத்த வேண்டும் என்று சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது.
பெருநகர சென்னை மாநகராட்சியில் நாள்தோறும் 5,000 மெட்ரிக் டன் குப்பைகள் சேகரிக்கப்படுகின்றன. திடக்கழிவு மேலாண்மை திட்டத்தின் கீழ், 19,467 பணியாளர்கள் வீடு, வீடாக சென்று குப்பைகளை சேகரிக்கின்றனர். பின்னர் அவை மக்கும் மற்றும் மக்காத குப்பையாக தரம் பிரிக்கப்படுகிறது.
திடக்கழிவு மேலாண்மை விதிகளில் திருத்தம் செய்து கடந்த பிப்ரவரி அரசாணை ஒன்று வெளியிடப்பட்டது. அதன்படி, வீடுகளுக்கு 10 ரூபாய் முதல் 100 ரூபாய் வரையும், திருமண மண்டபங்களுக்கு 1000 ரூபாய் முதல் 10 ஆயிரம் ரூபாய் வரையும் கட்டணம் நிர்ணயிக்கப்பட்டது.
இது தவிர, உணவு கூடங்களுக்கு 300 ரூபாய் முதல் 5 ஆயிரம் ரூபாய் வரை, அலுவலகங்களுக்கு 300 ரூபாய் முதல் 3 ஆயிரம் ரூபாய் வரை, கடைகளுக்கு 200 ரூபாய் முதல் 1000 ரூபாய் வரை, விழாக்களுக்கு 5 ஆயிரம் ரூபாய் முதல் 20 ஆயிரம் ரூபாய் வரை என கட்டணம் நிர்ணயிக்கப்பட்டது.
மருத்துவமனைகள், கல்வி நிலையங்கள், திரையரங்குகள் ஆகியவற்றுக்கும் தனித்தனியே கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், ஜனவரி 1ம் தேதி முதல் இந்த குப்பைக்கான கட்டணத்தை சொத்து வரியுடன் சேர்த்து செலுத்த வேண்டும் என்று சென்னை மாநகராட்சி அறிவித்துள்ளது.