புதுடெல்லி: கடந்த 2000ம் ஆண்டிற்கு பிறகு இந்திய அணியை ஒரு வலுவான அமைப்பாக மற்றும் ஆக்கப்பூர்வமாக கட்டியமைத்தவர் சவுரவ் கங்குலிதான் என்று புகழாரம் சூட்டியுள்ளார் முன்னாள் இந்திய வீரர் வாசிம் ஜாஃபர்.
மேலும், யுவ்ராஜ் சிங், ஹர்பஜன் சிங் மற்றும் ஜாகீர் கான் ஆகியோரை அணிக்கு கொண்டுவந்து அவர்களுக்கு நிறைய வாய்ப்புகளை வழங்கி, அவர்களை வார்த்தெடுத்தது மட்டுமின்றி, வீரேந்திர சேவாக் என்ற வீரரின் திறமையைக் கண்டறிந்து, அவரை துவக்க வீரராக களமிறக்கியதும் கங்குலியே என்றுள்ளார் அவர்.
அவர் மேலும் கூறியதாவது, “சூதாட்ட சர்ச்சையில் சிக்கி துவண்டு போயிருந்த இந்திய அணியை, மீட்டுக் கொண்டுவந்து, அதை ஒரு சக்தியாக கட்டமைத்தார். அவரிடம் நிறைய பொறுமை இருந்தது. அணி வீரர்களுக்கு நிறைய ஆதரவு தந்தார். அதிக வாய்ப்புகளை வழங்கினார்” என்றுள்ளார் வாசிம் ஜாஃபர்.
சில காலங்கள் முன்னதாக, சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து தனது ஓய்வை அறிவித்தார் வாசிம் ஜாஃபர் என்பது நமக்கு நினைவிருக்கலாம்.
இதைப்போன்ற கருத்துகளை இதற்கு முன்னர், யுவ்ராஜ் சிங் போன்ற வேறுசில வீரர்களும் தெரிவித்துள்ளனர். இந்திய அணியைப் பொறுத்தவரை, கேப்டன்சி என்று வரும்போது, கங்குலி எப்போதும் நினைவுகூறப்படுவார் என்பதே பல கிரிக்கெட் ஆர்வலர்களின் கருத்து.