சென்னை:
விநாயகர் சிலைகளை கரைக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

கடந்த சில ஆண்டுகளாக விநாயகர் சதுர்த்தி நாடு முழுவதும் பெரும் கொண்டாட்டத்துடன் கொண்டாடப்படுகிறது. விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு நாடு முழுவதும் லட்சத்துக்கும் அதிகமான சிலைகள் சாலைகளில் வைக்கப்பட்டுள்ளது. வீடுகளில் சாதாரணமாக கொண்டாடப்பட்ட விநாயகர் சதுர்த்தி இப்போது ஏரியாவுக்கு ஏரியா, தெருவுக்கு தெரு பிரமாண்ட சிலைகளை வைத்துக் கொண்டாடுகிறார்கள்.

விநாயகர் சிலைகளை கரைப்பதற்கு பட்டினப்பாக்கம் சீனிவாசபுரம் கடற்கரை பகுதி, காசிமேடு, நீலாங்கரை பல்கலை நகர், திருவொற்றியூர் பாப்புலர் எடைமேடை கடலோர பகுதி ஆகிய 4 இடங்கள் ஒதுக்கப்பட்டு உள்ளது. இங்கு மட்டுமே விநாயகர் சிலைகளை கரைக்க வேண்டும் என்று போலீசார் தெரிவித்துள்ளனர். இதற்கான ஏற்பாடுகள் 4 இடங்களிலும் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இந்நிலையில் ஆங்காங்கே வைக்கப்பட்டுள்ள விநாயகர் சிலைகளுக்கு பாதுகாப்பு மற்றும் ஊர்வலமாக எடுத்து சென்று நீர்நிலைகளில் கரைக்கும் நிகழ்விற்கான கண்காணிப்பு மற்றும் பாதுகாப்பு பணியில் 21 ஆயிரம் போலீசார் ஈடுபடுத்தப்பட இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

சென்னை, ஆவடி, தாம்பரம் ஆணையரகங்களை சேர்த்து சுமார் 21,800 காவலர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர். அதேபோல் இந்த பணியில் 2,650 ஊர்காவல் படையினரும் ஈடுபட உள்ளனர்.

சென்னையில் 1,362 சிலைகளும், ஆவடியில் 503 சிலைகளும், தாம்பரத்தில் 699 சிலைகளும் வழிபாட்டிற்காக வைக்கப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.