புதுச்சேரி: புதுச்சேரியில் பொதுஇடங்களில் விநாயகர் சிலை வைத்து வழிபட அம்மாநில துணைநிலை ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் அனுமதி வழங்கி உள்ளார்.
நாடு முழுவதும் கொரோனா பரவல் மீண்டும் அதிகரிக்க தொடங்கியுள்ளது. இதனால், பல மாநிலங்களில் கல்வி நிலையங்கள் உள்பட அனைத்தும் திறக்கப்பட்டு, பொதுமக்களின் இயல்புவாழ்க்கை திரும்பி உள்ளது. இருந்தாலும் பண்டிகை காலங்களில் எச்சரிக்கையாக இருக்கும்படியும், கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை பின்பற்றும்படியும் மத்திய அரசு, மாநில அரசுகளுக்கு அறிவுறுத்தி உள்ளது. இதன் காரணமாக, தமிழ்நாட்டில் திமுக அரசு விநாயகர் சதுர்த்திக்கு சிலை வைக்க அனுமதி மறுத்துள்ளது. இது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. தமிழக அரசின் உத்தரவுக்கு இந்து அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன.
இந்த நிலையில், புதுச்சேரியில் பொது இடங்களில் விநாயகர் சிலை வைத்து வழிபட அனுமதி வழங்கப்படுவதாக அம்மாநில துணைநிலை ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்துள்ளார். மேலும் கொரோனா தடுப்பு விதிகளை பின்பற்றி மக்கள் விநாயகர் சதுர்த்தி விழாவை கொண்டாட வேண்டும் என்றும், தெலுங்கானாவில் உள்ளதை போன்று புதுச்சேரியிலும் விநாயகர் சதுர்த்திக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
பல மாநிலங்களில் விநாயகர் சதுர்த்திக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ள நிலையில், தமிழ்நாட்டில் அனுமதி மறுக்கப்பட்டு உள்ளது குறிப்பிடத்தக்கது.