டெல்லி: நாடாளுமன்ற வளாகத்திற்குள் இருந்த காந்தி, அம்பேத்கர், சத்ரபதி சிவாஜி சிலைகள் இடமாற்றம் செய்யப்பட்டு உள்ளது. இதற்கு  காங்கிரஸ் கட்சி கண்டனம் தெரிவித்து உள்ளது.

நாடாளுமன்ற வளாகத்தின் முகப்புப் பக்கத்தில் இருந்த சிவாஜி, காந்தி, அம்பேத்கர் சிலைகள் அங்கிருந்து அகற்றப்பட்டுள்ளது. இது அராஜக நடவடிக்கை என்று காங்கிரஸ் மூத்த தலைவர் ஜெய்ராம் ரமேஷ் புகைப்படங்களுடன் பதிவிட்டுள்ளார்.

புதிய பாராளுமன்றம் கட்டப்பட்டு நடைமுறைக்கு வந்துள்ள நிலையில், பழைய பாராளுமன்ற கட்டிட வளாகத்தின் புள்வெளியில் இருந்த பல சிலைகள் இடமாற்றம் செய்யப்பட்டு வருகிறது. அதன்படி,  சிவாஜி, காந்தி, அம்பேத்கர் சிலைகள் இடமாற்றம் செய்யப்பட்டு உள்ளது. ஏற்கனவே, பழங்குடியின தலைவர் பிர்சா முண்டா மற்றும் மகாராணா பிரதாப் சிலைகள் உட்பட அனைத்து சிலைகளும் இப்போது ஒரே இடத்தில் உள்ளன.

இந்த சிலைகள் அனைத்தும், பழைய பாராளுமன்ற கட்டிடத்திற்கும் பாராளுமன்ற நூலகத்திற்கும் இடையே உள்ள புல்வெளியில் அமைந்துள்ளது.

இந்த குறித்து காங்கிரஸ் பொதுச்செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் கூறுகையில், “சத்ரபதி சிவாஜி மகாராஜ், மகாத்மா காந்தி மற்றும் டாக்டர் பாபாசாகேப் அம்பேத்கர் ஆகியோரின் சிலைகள் நாடாளுமன்ற வளாகத்தில் உள்ள அவர்களின் முக்கிய இடங்களிலிருந்து இப்போது அகற்றப்பட்டுள்ளன. இது கொடுமையானது என தெரிவித்துள்ளார்.

காங்கிரஸின் ஊடகங்கள் மற்றும் விளம்பரத் துறைத் தலைவர் பவன் கேரா கூறுகையில், மகாராஷ்டிரா வாக்காளர்கள் பாஜகவுக்கு வாக்களிக்காததால், சிவாஜி மற்றும் அம்பேத்கர் சிலைகள் நாடாளுமன்றத்தில் இருந்த இடத்திலிருந்து அகற்றப்பட்டன என குற்றம் சாட்டி உள்ளார்.

இந்த சிலைகள் மாற்றம் ஏற்கனவே முடிவு செய்யப்பட்டு, அதற்கான பணிகள் நடைபெற்று வந்த நிலையில், தற்போதைய தேர்தல் முடிவை அதனுடன் முடிச்சு போட்டு காங்கிரஸ் கட்சி பேசுவது அபத்தமானது பாஜக தலைவர்கள் கூறி வருகின்றனர்.