அயோத்தியில் பிரதமர் மோடி ஜனவரி 22ம் தேதி ராமர் கோயிலை திறந்துவைப்பதற்கு சில வாரங்கள் முன் பக்தர்களின் வசதிக்காக அங்கு விமான நிலையம் துவக்கி வைக்கப்பட்டது.
மகரிஷி வால்மீகி சர்வதேச விமான நிலையம் என்று பெயரிடப்பட்ட இந்த விமான நிலையத்துக்கு நாட்டின் 20 முக்கிய நகரங்களில் இருந்து தினசரி விமான சேவை கனஜோராக துவங்கியது.
ஆனால் தற்போது ஏழு மாதங்கள் ஆன நிலையில் அயோத்திக்கு வரும் பக்தர்களின் எண்ணிக்கை பெருமளவு குறைந்துள்ளது.
இதனால் தினசரி விமான சேவைகள் வாரம் இருமுறை என்றும் வாரத்துக்கு ஒன்று என்றும் இயக்கப்பட்டு வருகிறது.
ஹைதராபாத், பாட்னா, தர்பங்கா மற்றும் கல்கத்தா ஆகிய நகரங்களில் இருந்து தினசரி சேவைகள் நிறுத்தப்பட்டுள்ளன. அகமதாபாத், டெல்லி, மும்பை மற்றும் பெங்களூரு உள்ளிட்ட நகரங்களுக்கு நேரடி விமான சேவை தொடர்கிறது.
ராமர் கோயில் திறக்கப்பட்ட போது அலையலையாக வந்த பக்தர்கள் கூட்டம் தற்போது ஓய்ந்ததை அடுத்து கடந்த இரண்டு மாதங்களில் மட்டுமே 13 நகரங்களுக்கான விமான சேவை நிறுத்தப்பட்டுள்ளது.
பருவமழை காரணமாக அதிக பயணிகள் வருவதில்லை என்று விமான நிலைய அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டாலும் விமானம் தவிர ரயில் மற்றும் பேருந்துகளில் வரும் பக்தர்கள் கூட்டமும் குறைந்துபோயுள்ளதாக அயோத்தி மக்கள் கூறிவருகின்றனர்.
இதனால் அயோத்திக்கு சர்வதேச விமான சேவையை எதிர்பார்த்துக் காத்திருந்த மக்கள் பெரும் ஏமாற்றத்தில் உள்ளதுடன் உள்ளூர் விமான சேவையும் முற்றிலும் முடங்கிவிடுமோ என்ற அச்சத்தில் உள்ளனர்.