காஞ்சிபுரம்
இன்று காஞ்சிபுரம் மேயருக்கு எதிரான நம்பிக்கை இல்லா தீர்மானத்தின் போது உறுப்பினர் யாரும் வராததால் அவருடைய பதவி தப்பி உள்ளது.
திமுகவைச் சேர்ந்த மகாலட்சுமி யுவராஜ் 51 வார்டுகள் கொண்ட காஞ்சிபுரம் மாநகராட்சி மேயராக உள்ளார். அவர் மீது எதிர்க்கட்சிகளை சேர்ந்த உறுப்பினர்கள் பல்வேறு புகார்களை கூறி வந்த நிலையில், திமுக மாமன்ற உறுப்பினர்களும் மேயருக்கு எதிராக போர்க்கொடி தூக்கினர். எனவே மேயர் தனது பெரும்பான்மையை நிரூபிக்க உத்தரவிடக் கோரி 33 மாமன்ற உறுப்பினர்கள் மாநகராட்சி ஆணையர் செந்தில் முருகனிடம் மனு அளித்தனர்.
இன்று காலை 10 மணிக்கு தீர்மானத்தின் மீதான விவாதமும் வாக்கெடுப்பும் நடைபெறும் என்று மாநகராட்சி ஆணையர் அறிவித்திருந்தால் இன்று காலை 10 மணிக்கு மாநகராட்சி ஆணையர் தலைமையில் கூட்டம் தொடங்கியது., மேயர் மகாலட்சுமி யுவராஜ் ஆதரவு கவுன்சிலர்கள் மற்றும் எதிர்ப்பு கவுன்சிலர்கள் யாரும் கூட்டத்தில் கலந்து கொள்ளாததால் பரபரப்பு நிலவியது.
கூட்டத்துக்கு வந்த 34 வது வட்ட கவுன்சிலர் பிரவீன் குமார், மாநகராட்சி கூட்டம் நடத்துவது குறித்து மாநகராட்சி ஆணையர், மாநகராட்சி கவுன்சிலர்களுக்கு முன்னுக்கு பின் முரணான தகவல்களை அளித்திருப்பதை கண்டித்து கடிதம் வழங்கிவிட்டு திரும்பிச் சென்று விட்டார்.
காஞ்சிபுரம் மேயருக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வந்த கவுன்சிலர்கள் குடும்பத்துடன் பேருந்து மூலம் உதகைக்கு நேற்று மாலை சுற்றுலா சென்றதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. நீண்ட நேரம் கடந்தும் எந்த மாமன்ற உறுப்பினரும் கலந்து கொள்ளாத நிலையில் நம்பிக்கை இல்லாத தீர்மானம் தோல்வி என மாநகராட்சி ஆணையர் செந்தில் முருகன் அறிவித்துள்ளார்.