டெல்லி: ஈரான், அமெரிக்கா, இஸ்ரேல் போர் காரணமாக, எரிபொருள் தட்டுபாடு எழுந்துள்ள நிலையில், மாநில முதல்வர்களுடன் பிரதமர் மோடி இன்று மாலை ஆலோசனை நடத்துகிறார்.
5 மாநிலங்களில், தேர்தல் நடத்தை விதிகள் அமலில் உள்ளதால், சட்டமன்றத் தேர்தல் நடைபெறவுள்ள தமிழ்நாடு, புதுச்சேரி, அசாம், மேற்குவங்கம், கேரளம் ஆகிய மாநிலங்களின் முதலமைச்சர்கள், பிரதமர் மோடி தலைமையில் நடக்கும் கூட்டத்தில் பங்கேற்கமாட்டார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேற்காசியாவில் நிலவும் போர் சூழல் குறித்து பிரதமர் நரேந்திர மோடி, இன்று (மார்ச் 27) மாநில மற்றும் யூனியன் பிரதேசங்களின் முதலமைச்சர்களுடன் ஆலோசனை நடத்துகிறார். இந்த போர் காரணமாக, வளைகுடா நாடுகளில் உள்ள எண்ணெய் வயல்களில் கச்சா எண்ணெய் உற்பத்தி மற்றும் எல்என்ஜி எரிவாயு உற்பத்தி பாதிப்பு போன்றவற்றால் உலகளவில் எரிபொருள் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இது உலக நாடுகளிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.
மேலும், வணிக போக்குவரத்து மற்றும் எண்ணை கப்பல்கள் செல்லும் ஹார்முஸ் ஜலசந்தியை ஈரான் மூடியதால், வழியாக கப்பல் உலகளவில் பல்வேறு நாடுகளில் இருந்தும் ஹார்முஸ் வழியாக கச்சா எண்ணெய், எல்என்ஜி கப்பல்களைக் கொண்டு செல்வதில் சிக்கல் எழுந்துள்ளது. ஆனால், ஈரான் இந்தியா உள்பட நட்பு நாடுகளுக்கு மட்டும் எரிபொருள் எடுத்துச்செல்ல அனுமதி வழங்கி உள்ளது.
இருந்தாலும், இந்தியாவில் பல மாநிலங்களில் எரிபொருள் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. சில பகுதிகளில் பெட்ரோல் நிலையங்கள் மூடப்பட்டுள்ளன. பல பகுதிகளில் ஓட்டல்கள் மூடப்பட்டுள்ளன. இதனால், தொழிலாளர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது. அதேபோல், காலி எல்பிஜி கேஸ் சிலிண்டர்களுடன் கேஸ் ஏஜென்சி அலுவலகங்கள் முன்பு பொதுமக்கள் காத்திருக்கும் நிலையும் நிலவுகிறது.
இந்த சூழலில், மேற்காசியாவில் நிலவும் போர் சூழல் மற்றும் எரிபொருள் தட்டுப்பாடு குறித்து பிரதமர் நரேந்திர மோடி, இன்று (மார்ச் 27) மாலை அனைத்து மாநில முதலமைச்சர்கள், யூனியன் பிரதேசங்களின் முதலமைச்சர்களுடன் காணொளி வாயிலாக ஆலோசனை நடத்தவுள்ளார்.
தேர்தல் நடத்தை விதிகள் காரணமாக, சட்டமன்றத் தேர்தல் நடைபெறவுள்ள தமிழ்நாடு, புதுச்சேரி, அசாம், மேற்கு வங்கம், கேரளம் ஆகிய மாநிலங்களின் முதலமைச்சர்கள், பிரதமர் கூட்டத்தில் பங்கேற்கமாட்டார்கள் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், அந்த மாநிலங்களின் தலைமைச் செயலாளர்களுடன் மத்திய அமைச்சரவைச் செயலகம் தனி கூட்டத்தை நடத்தி ஆலோசிக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பிரதமர் தலைமையிலான ஆலோசனைக் கூட்டத்தில் மாநிலங்களில் எரிபொருள் கையிருப்பு மற்றும் விநியோகம் குறித்து ஆலோசிக்கப்படவுள்ளதாகவும், மாநில அரசுகள் மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்தும் விவாதிக்கப்பட உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
[youtube-feed feed=1]