உணவுப் பொருட்களை விநியோகம் செய்யும் ஆன்லைன் இ-காமர்ஸ் நிறுவனங்கள் பொருட்களை வழங்கும் முன் காலாவதிக்கு குறைந்தபட்சம் 45 நாள் இருப்பதை உறுதிசெய்ய அறிவுறுத்தப்பட்டுள்ளன.
இதுகுறித்து உணவு வணிக ஆபரேட்டர்கள் மற்றும் இ-காமர்ஸ் நிறுவனங்களுக்கு இந்திய உணவுப் பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையம் (FSSAI) வழங்கியுள்ள அறிவுரையில், தயாரிப்புகளின் குறைந்தபட்ச ஷெல்ப் லைஃப் (shelf life) 30 சதவிகிதம் அல்லது டெலிவரி நேரத்தில் அவை காலாவதியாக குறைந்தது 45 நாட்கள் இருக்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளது.
ஒரு மாதத்திற்கு தேவையான மளிகை உள்ளிட்ட பதப்படுத்தப்பட்ட உணவுப் பொருட்களை ஆன்லைன் நிறுவனங்கள் மூலம் வாங்கும் வாடிக்கையாளர்கள் காலாவதி தேதிக்கு ஒரு சில நாட்களே உள்ள உணவுப் பொருட்கள் விநியோகிக்கப்படுவதாக கூறும் புகார்கள் அதிகரித்து வருகிறது.
இதையடுத்து FSSAI, e-commerce FBO களை, வாடிக்கையாளர்களுக்கு டெலிவரி செய்யும் நேரத்தில், காலாவதியாகும் தேதிக்கு 30 சதவீதம் அல்லது 45 நாட்களுக்கு முன்னதாக, குறைந்தபட்ச ஷெல்ப் லைஃப்-க்கு உத்தரவாதம் அளிக்கும் நடவடிக்கைகளை செயல்படுத்துமாறு வலியுறுத்தி உள்ளது.
இ-காமர்ஸ் தளங்களில் செய்யப்படும் அனைத்து விளம்பரங்களும் தயாரிப்பு லேபிள்களில் வழங்கப்பட்ட தகவல்களுடன் ஒத்துப்போக வேண்டும் மற்றும் FSSAI இன் லேபிளிங் மற்றும் காட்சி விதிமுறைகளுக்கு இணங்க வேண்டும் என்று கூறிய அதிகாரிகள் ஆன்லைனில் ஆதாரமற்ற கூற்றுகளை செய்வதைத் தவிர்க்குமாறு உணவு வணிக ஆபரேட்டர்களை (FBOs) எச்சரித்தனர்.
நுகர்வோர் ஆரோக்கியத்தைப் பாதுகாப்பதிலும் வெளிப்படைத்தன்மையை மேம்படுத்துவதிலும் ஆன்லைன் தளங்களின் முக்கியப் பங்கு குறித்து தெளிவுபடுத்திய அதிகாரிகள் தவறான தகவல்களைத் தவிர்க்கவும், துல்லியமான தயாரிப்புத் தகவலுக்கான நுகர்வோரின் உரிமையைப் பாதுகாக்கவும் தேவையான முயற்சிகளை உணவு வணிக ஆபரேட்டர்கள் மேற்கொள்ளவேண்டும் என்று கூறியுள்ளனர்.