பால் மற்றும் பால் பொருட்களின் பாக்கெட்டுகளின் மீது ‘ஏ1’ மற்றும் ‘ஏ2’ வகை என்று குறிப்பிடுவதை நீக்குமாறு உணவு வணிக செயற்பாட்டாளர்கள் மற்றும் இ-காமர்ஸ் நிறுவனங்களுக்கு இந்திய உணவு பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையமான FSSAI அறிவுறுத்தியுள்ளது.
இதுகுறித்து இருதினங்களுக்கு முன் FSSAI வெளியிட்டிருக்கும் உத்தரவில் ‘ஏ1’ மற்றும் ‘ஏ2’ வகை பால் அல்லது பால் பொருள் என்று குறிப்பிடுவது உணவு பாதுகாப்பு மற்றும் தரநிலை சட்டம், 2006க்கு முரணானது என்று கூறியுள்ளது.
பீட்டா-கேசீன் புரதத்தின் கட்டமைப்பு A1 மற்றும் A2 பாலில் வேறுபடுவதாக உணவு வணிக நிறுவனங்கள் அந்த பாக்கெட்டுகளின் மீது குறிப்பிடுகின்றன.
இதை ஆய்வு செய்த FSSAI அதிகாரிகள், A1 மற்றும் A2 பால் அவற்றின் பீட்டா-கேசீன் புரத கலவையில் வேறுபடுகின்றன என்றபோதும் இது மாட்டு இனம் மற்றும் ரகத்தின் அடிப்படையில் மாறுபடும் என்று தெரிவித்துள்ளனர்.
இ-காமர்ஸ் தளங்கள் தயாரிப்புகள் மற்றும் இணையதளங்களில் இருந்து இந்த உரிமைகோரல்களை உடனடியாக அகற்றும்படி உத்தரவிட்டுள்ள FSSAI, FBOக்களும் இதனை அகற்ற அறிவுறுத்தியுள்ளது.
முன் அச்சிடப்பட்ட லேபிள்களை வெளியேற்ற FBO நிறுவனங்களுக்கு ஆறு மாதங்கள் அவகாசம் கொடுக்கப்பட்டுள்ளது, மேலும் நீட்டிப்புகள் எதுவும் வழங்கப்படாது என்று அந்த அறிவிப்பில் குறிப்பிட்டுள்ளது.