சென்னை

நேற்று முதல் படிப்படியாக விரைவு மற்றும் அதி விரைவு ரயில்களில் முன்பதிவு இல்லாத பெட்டிகள் இணைக்கப்படுகின்றன.

இந்தியாவில் கொரோனா பரவலால் பல கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன.  அவற்றில் ஒன்றாக விரைவு மற்றும் அதி விரைவு ரயில்களில் முன்பதிவு இல்லாத பெட்டிகள் நீக்கப்பட்டன.  அனைத்து பயணிகளும் முன்பதிவு செய்த பிறகே பயணிக்க வேண்டும் என்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

தற்போது கொரோனா பாதிப்பு வெகுவாக குறைந்துள்ளதால் அனைத்து ரயில்களிலும் உள்ள 2 ஆம் வகுப்பு இருக்கை வசதி பெட்டிகளை முன்பதிவு மற்றும் முன்பதிவு  இல்லாத பெட்டிகளாக இருவகை படுத்தப்படும் என ரயில்வே வாரியம் தெரிவித்தது.

இதையொட்டி தெற்கு ரயில்வே, தென் மாவட்டங்களுக்குச் செல்லும் ரயில்கள் உள்ளிட்ட 102 விரைவு ரயில்களில் மீண்டும் முன்பதிவில்லா பெட்டிகள் இணைக்கப்படும் என அறிவித்தது.  நேற்று முதல் கட்டமாகச் சென்னை செண்டிரலில் இருந்து புறப்படும் யஷ்வந்த்பூர், ஹூபிளீ ஆகிய விரைவு ரயில்களில் முன்பதிவில்லா பெட்டிகள் இணைக்கப்பட்டுள்ளன.

அடுத்ததாக நாகர்கோவில், முத்துநகர், உழவன் விரைவு ரயில் ஆகியவற்றில் ஏப்ரல் 1 முதல் முன்பதிவில்லா பெட்டிகள் இணைக்கப்படுகின்றன.  அதைத் தொடர்ந்து ஏப்ரல் 16 முதல் நெல்லை, குமரி, பாண்டியன்,  பொதிகை, ராமேஸ்வர விரவு ரயில்களில் முன்பதிவில்லா பெட்டிகள் இணைக்கப்பட உள்ளன.