சென்னை
தமிழக அமைச்சர் சேகர்பாபு நாளை முதல் 48 கோவில்களில் இலாச நீர் மோர் வழங்கப்படும் என அறிவித்துள்ளார்.
இன்று சென்னையில் நடந்த செய்தியாளர்கள் சந்திப்பில் தமிழக அமைச்சர் சேகர்பாபு,
”தமிழகத்தில் வெயிலின் தாக்கம் அதிகரித்து வரும் நிலையில் முதற்கட்டமாக 48 கோவில்களில் நாளை முதல் பக்தர்களுக்கு இலவச நீர்மோர் வழங்கும் திட்டம் செயல்படுத்தப்படும். இத்திட்டம் நாளை மயிலாப்பூர் கபாலீசுவரர் கோவிலில் தொடங்கி வைக்கப்படுகிறது.
முதல்வர் மு.க.ஸ்டாலின் மக்களின் தேவைகளை நன்கு அறிந்தவர். ஆகவே வெயிலின் தாக்கம் தொடங்குவதற்கு முன்பாக இந்த திட்டத்தைச் செயல்படுத்த உத்தரவிட்டுள்ளார். மேலும் கோவிலுக்குள் கருங்கல் பதித்த தரை உள்ள இடங்களில் வெயிலின் தாக்கத்தைக் கருத்தில் கொண்டு கயிற்றால் ஆன தரை விரிப்பு அமைக்கப்படும்.
முதல்வரின் உத்தரவின் பேரில் கோவிலில் உள்ள அனைத்து மண்டலங்களிலும் உழவாரப் பணிகள் தொடங்கப்பட்டுள்ளது. முதல்வர் உலக முருக பக்தர்கள் மாநாட்டை நடத்த உத்தரவிட்டுள்ளார். அதன்படி ஜூன் அல்லது ஜூலை மாதத்தில் பழனியில், உலக முருக பக்தர்கள் மாநாட்டை நடத்துவதற்கானப் பணிகளில் அறநிலையத்துறை ஈடுபட்டுள்ளது.”
என்று தெரிவித்துள்ளார்.