டில்லி

ங்கிகள் இணைப்பால் ஏப்ரல் 1 அதாவது நாளை முதல் 7 பொதுத்துறை வங்கிகளின் காசோலைகள் செல்லாததாகிறது.

வங்கிகள் சீரமைப்பின் அடிப்படையில் விஜயா வங்கி, கார்ப்பரேஷன் வங்கி, ஆந்திரா வங்கி, சிண்டிகேட் வங்கி, ஓரியண்டல் பேங்க் ஆஃப் காமர்ஸ், யுனைடெட் பேங்க் ஆஃப் இந்தியா, அலகாபாத் வங்கி மற்றும் தேனா வங்கி ஆகிய பொதுத்துறை வங்கிகள் இதர முக்கியமான பொதுத்துறை வங்கிகளுடன் இணைக்கப்பட்டன. இதையொட்டி சம்பந்தப்பட்ட வங்கிகளில் கணக்கு வைத்திருப்பவர்களுக்கு சிறு சிக்கல்கள் ஏற்பட வாய்ப்புண்டு.

இதில் ஓரியண்டல் பேங்க் ஆப் காமர்ஸ் மற்றும் யுனைடெட் பேங்க் ஆஃப் இந்தியா ஆகிய இரு வங்கிகள் பஞ்சாப் நேஷனல் வங்கியுடன் இணைக்கப்பட்டிருக்கிறன. அதனால், மேலே குறிப்பிட்ட இரு வங்கிகளில் கணக்கு வைத்துள்ள வாடிக்கையாளர்கள் இனி பஞ்சாப் நேஷனல் வங்கியின் காசோலை மற்றும் கணக்கு புத்தகத்தை பயன்படுத்த வேண்டி இருக்கும்.

இதைப் போல் தேனா வங்கி மற்றும் விஜயா வங்கி உள்ளிட்ட இரு வங்கிகளும் பேங்க் ஆப் பரோடா வங்கியுடன் இணைக்கப்பட்டிருக்கின்றன. ஆகவே மேலே குறிப்பிட்ட இந்த இரு வங்கிகளில் கணக்கு வைத்திருப்பவர்கள் பேங்க் ஆஃப் பரோடா காசோலை புத்தகத்தை பயன்படுத்த வேண்டி இருக்கும்.

மேலும் கார்ப்பரேஷன் வங்கி மற்றும் ஆந்திரா வங்கி ஆகிய இரு வங்கிகள், யூனியன் பேங்க் ஆப் இந்தியாவுடன் இணைக்கப்பட்டன. இந்த இரு வங்கிகளின் வாடிக்கையாளர்கள் பேங்க் ஆஃப் இந்தியா காசோலையை இனி பயன்படுத்த வேண்டி இருக்கும்.

இது  தொடர்பாக வங்கிகள் வாடிக்கையாளர்களுக்கு தகவல் கொடுத்திருக்கின்றன. ஒருவேளை வாடிக்கையாளர்களுக்கு தகவல் கிடைக்கவில்லை எனில், சம்பந்தப்பட்ட வங்கியை அணுகி புதிய காசோலை மற்றும் வங்கி கணக்கு புத்தகத்துக்கு விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கபட்டுள்ளது.

இந்நிலையில் சிண்டிகேட் வங்கி மற்றொரு பொதுத்துறை வங்கியான கனரா வங்கியுடன் இணைக்கப்பட்டது.  கடந்த ஆண்டு ஏப்ரல் 1 ஆம் தெதி முதல் இந்த இணைப்பு அமலுக்கு வந்தது. ஆயினும் சிண்டிகேட் வங்கி வாடிக்கையாளர்களுக்கு கனரா வங்கி சிறிதளவு கால அவகாசம் வழங்கி இருக்கிறது.

எனவே வரும் ஜூன் மாதம் 30-ம் தேதி வரை சிண்டிகேட் வங்கியின் கணக்கு புத்தகம் மற்றும் காசோலை செல்லும் என கனரா வங்கி அறிவித்திருக்கிறது.  அதே வேளையில் சிண்டிகேட் வங்கி வாடிக்கையாளர்களுக்கு சிறிது கால அவகாம இருந்தாலும், தற்போதே புதிய காசோலைக்கு விண்ணப்பிக்கும் பட்சத்தில் வங்கி பரிவர்த்தனையை தடையில்லாமல் செய்யலாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.