கான்பெர்ரா
இன்று முதல் ஆஸ்திரேலியாவில் மாணவர் விசா கட்டணம் இரு மடங்காக அதிகரிக்கப்பட்டுள்ளது.
இந்த ஆண்டு மார்ச் மாதம் வெளியான தரவுகளின் படி கடந்தாண்டு செப்டம்பர் வரை ஆஸ்திரேலியாவில் குடியேறுபவர்கள் 60 சதவீதம் உயர்ந்து 5,48,800 பேரை எட்டியுள்ளதாகத் தகவல்கள் வெளியாகின. எனவே ஆஸ்திரேலிய அரசாங்கம் சர்வதேச மாணவர்களுக்கான கட்டணத்தை இருமடங்காக உயர்த்தியுள்ளது.
மேலும் இந்தக் கட்டண உயர்வு இன்று (ஜூலை 1) முதல் அமலுக்கு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதிகளவிலான மாணவர்களின் இடம்பெயர்வைக் கட்டுப்படுத்தும் நோக்கில் இந்தக் கட்டண உயர்வு கொண்டு வரப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுநாள் வரையில் 710 ஆஸ்திரேலிய டாலர்களாக இருந்த சர்வதேச மாணவர்களுக்கான விசா கட்டணம் 1,600 ஆஸ்திரேலிய டாலர்களாக உயர்த்தப்பட்டுள்ளது. இது இந்திய ரூபாய் மதிப்பில் ரூ.89,118 ஆகும். பார்வையாளர் விசா, தற்காலிக பட்டதாரி விசா வைத்துள்ளவர்கள் ஆன்ஷோரில் மாணவர் விசா விண்ணப்பிக்கவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.
தற்போது கொண்டு வந்துள்ள மாற்றங்கள் சர்வதேச கல்வி முறையின் தரத்தை மேம்படுத்தவும், இடம்பெயர்வை குறைவாகவும், சிறப்பாகவும் மாற்ற ஆஸ்திரேலியாவுக்கு உதவும் என்றும் ஆஸ்திரேலிய உள்துறை அமைச்சர் கிளேர் ஓநீல் தெரிவித்துள்ளார்.