பெங்களூரு
இன்று முதல் கர்நாடகாவில் கொரோனா பரிசோதனை தீவிரமாக்கப்பட்டுள்ளது,

கடந்த சில நாட்களாக நாடு முழுவதும் மீண்டும் கொரோனா பாதிப்பு ஏற்பட்டு வருவதால் கர்நாடகாவில் கொரோனா பாதிப்புக்கு உள்ளாகும் நபர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே வருகிறது. தலைநகர் பெங்களூரு அருகே ஒசக்கோட்டையில் 9 மாத ஆண் குழந்தைக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதியானதால், பெங்களூரு வாணிவிலாஸ் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது
நேற்று முன்தினம் ஒரே நாளில் பெலகாவியை சேர்ந்த 25 வயது கர்ப்பிணி உள்பட 19 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதியாகி உள்ளதால் கர்நாடகாவில் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 35 ஆக உயர்ந்திருந்தது. மீண்டும் நேற்று ஒரே நாளில் 5 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதியானதால் கொரோனா பாதிக்கப்பட்டோர் ஒட்டு மொத்த எண்ணிக்கை 40 ஆக உயர்ந்தது.
நேற்று கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டிருந்த பெங்களூரு புறநகரை சேர்ந்த ஒருவர் உயிரிழந்தார். கர்நாடகத்தில் கொரோனாவுக்கு முதல் பலி இதுவாகும். மாநிலத்தில் கொரோனா பாதிப்பு அதிகரிக்க தொடங்கியதும் எச்சரித்து கொண்ட சுகாதாரத்துறை மந்திரி தினேஷ் குண்டுராவ், பெங்களூருவில் சுகாதாரத்துறை அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார்.
பிற்கு சுகாதாரத்துறை அமைச்சர் தினேஷ் குண்டுராவ் செய்தியாளர்களிடம்.
”மாநிலத்தில் 35 பேர் இதுவரை கொரோனா பாதிப்புக்கு உள்ளாகி உள்ளனர். அவர்களுக்கு லேசான அறிகுறிகள் மட்டுமே இருந்தது. பெரிய அளவில் எந்த பிரச்சினையும் இல்லை. மக்கள் யாரும் பயப்பட வேண்டாம். பொதுமக்கள் அதிகம் கூடும் பகுதிகளில் முகக்கவசம் அணிந்து கொள்வது நல்லது. கொரோனா பரிசோதனையை தொடங்க சுகாதாரத்துறை முடிவு செய்துள்ளது. அதன்படி, நாளை (அதாவது இன்று) முதல் மாநிலத்தில் தீவிர கொரோனா பரிசோதனை தொடங்கப்படுகிறது.
என்று கூறியுள்ளார்.