வினாத்தாள் கசிவு, நீட் தேர்வு சர்ச்சை, வேலைவாய்ப்பின்மை உள்ளிட்ட பிரச்னைகளை முன்வைத்து, நாடு முழுவதும் மாணவர்கள் மற்றும் இளைஞர்களை ஒருங்கிணைக்கும் புதிய பிரசாரத்தை காங்கிரஸ் கட்சி தொடங்கியுள்ளது.
இதற்காக ராகுல் காந்தி நேரடியாக களமிறங்க உள்ளதாக அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளர் கே.சி. வேணுகோபால் தெரிவித்துள்ளார்.

காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே தலைமையிலும், லோக்சபா எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தியின் வழிகாட்டுதலிலும் இந்த இயக்கம் முன்னெடுக்கப்படுகிறது. இதன் ஒரு பகுதியாக, மாணவர்களுடன் நேரடியாக கலந்துரையாடும் மாநாடுகளை ராகுல் காந்தி நடத்த உள்ளார்.
முதல் மாநாடு ஜூன் 17ல் ராஜஸ்தானின் கோட்டாவில் நடைபெறுகிறது. தொடர்ந்து ஜூலை 10ல் அலகாபாத், ஜூலை 11ல் பாட்னா மற்றும் ஜூலை 14ல் டில்லியில் மாநாடுகள் நடத்தப்பட உள்ளன.
நீட், அரசு வேலைவாய்ப்பு தேர்வுகள் உள்ளிட்ட பல்வேறு போட்டித் தேர்வுகளில் ஏற்பட்ட வினாத்தாள் கசிவுகள் மற்றும் முறைகேடுகள் காரணமாக லட்சக்கணக்கான இளைஞர்களின் எதிர்காலம் பாதிக்கப்பட்டுள்ளதாக காங்கிரஸ் குற்றம்சாட்டியுள்ளது. தேர்வுக் கட்டண உயர்வு, வேலைவாய்ப்பு பற்றாக்குறை, ஆட்சேர்ப்பு தாமதம் போன்ற பிரச்னைகளும் இந்த மாநாடுகளில் பேசப்பட உள்ளன.

மாணவர்களை அதிகளவில் திரட்டுவதற்காக என்.எஸ்.யு.ஐ., இளைஞர் காங்கிரஸ் மற்றும் மாநில, மாவட்ட காங்கிரஸ் நிர்வாகிகள் கல்லூரிகள், பல்கலைக்கழகங்கள், பயிற்சி மையங்கள் உள்ளிட்ட இடங்களில் நேரடி பிரசாரம் மேற்கொள்ள உள்ளனர். சமூக வலைதளங்களிலும் தீவிர பிரசாரம் செய்ய திட்டமிடப்பட்டுள்ளது.
“நீட் தேர்வை மாநிலங்களுக்கு ஒப்படைக்க வேண்டும்; தேர்வுக் கட்டணங்களை ரத்து செய்ய வேண்டும்; வினாத்தாள் கசிவுக்கு காரணமானவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்; மத்திய கல்வி அமைச்சர் பதவி விலக வேண்டும்” என்ற கோரிக்கைகளையும் காங்கிரஸ் முன்வைக்க உள்ளது.
இளைஞர்களின் எதிர்காலம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு பிரச்னைகளை தேசிய அளவிலான முக்கிய விவகாரமாக மாற்றும் நோக்கில் இந்த இயக்கம் நடத்தப்படுவதாக காங்கிரஸ் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. நாடாளுமன்றத்திலும் இந்த விவகாரம் குறித்து விரிவான விவாதம் கோரப்பட உள்ளது.
[youtube-feed feed=1]