ஜம்மு:

காஷ்மீர் பனிச்சரிவில் இருந்து மீட்கப்பட்ட 5 ராணுவ வீரர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர்.

காஷ்மீர் மாநிலத்தில் தற்போது கடும் பனிப்பொழிவு நிலவி வருகிறது. இதன் காரணமாக ஆங்காங்கே பனிச்சரிவு ஏற்படுகிறது. இதில் சிக்கி பலர் மரணம் அடைந்துள்ளனர்.

ஏற்கனவே இரண்டு இடங்களில் நடைபெற்ற பனிச்சரிவில் ராணுவ வீரர்கள் உள்பட பொதுமக்களும் பலியாகி உள்ளனர்.

தமிழகத்தை சேர்ந்த 2 ராணுவ வீரர்களும் பனிச்சரிவில் சிக்கி உயிரிழந்துள்ளனர்.

இந்நிலையில் காஷ்மீர் மலைப்பகுதியில் உள்ள மச்சிலி செக்டார் என்ற இடத்தில் கடந்த 28-ம் தேதி பனிச்சரிவு ஏற்பட்டது. இதில் 5 ராணுவ வீரர்கள் சிக்கி கொண்டனர்.

ராணுவத்தின் மீட்புபடையினர் விரைந்துவந்து மீட்பு பணியில் ஈடுபட்டனர். பெரும் போராட்டத்திற்கு பின்னர் 5 ராணுவ வீரர்களும் கடந்த சனிக்கிழமை உயிருடன் மீட்கப்பட்டனர்.

ஆனால், படுகாயத்துடன் மீட்கப்பட்ட 5 ராணுவ வீரர்களையும் ஸ்ரீநகரில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு வர முடியாத அளவுக்கு வானிலை மிகவும் மோசமாக இருந்தது. இதன் காரணமாக அவர்களது உடல்நிலை மேலும் மோசமடைந்தது.

வானிலை ஓரளவு சீரடைந்ததும் 5 வீரர்களும் இன்று ஹெலிகாப்டர் மூலம் ஸ்ரீநகர் மருத்துவ மனைக்கு கொண்டு வரப்பட்டனர். ஆனால், வரும் வழியிலேயே 5 வீரர்களும் பரிதாபமாக உயிரிழந்தனர்.