சென்னை:

தேர்தலையொட்டி வரும் 16ந்தேதி காலை முதல் 18ந்தேதி இரவு 12 மணி வரை தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து டாஸ்மாக் மதுபான கடைகளும் கண்டிப்பாக மூடப்பட வேண்டும் என்று தேர்தல் ஆணையம் அதிகாரப்பூர்வமாக அறிவித்து உள்ளது.

தமிழகத்தில் வரும் 16ந்தேதி மாலையுடன் தேர்தல் பிரசாரம் முடிவடைய உள்ளது. 18ந்தேதி அன்று வாக்குப்பதிவு நடைபெறுகிறது.

‘இந்த நிலையில்,  வரும் 16-ஆம் தேதி காலை பத்து மணி முதல் வாக்குப் பதிவு தினமான 18-ஆம் தேதி இரவு 12 மணி வரை டாஸ்மாக் கடைகளை மூட உத்தரவிடப்பட்டுள்ளதாகத் தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யப்பிரதா சாஹு தெரிவித்துள்ளார். மேலும்,  வாக்கு எண்ணிக்கை நடைபெறும் 23-ஆம் தேதியன்றும் மதுபானங்கள் விற்பனைக்கு தடை விதிக்கப்படுவதாக அவர் தெரிவித்தார்.

தமிழகத்தில் தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்த பிறகு, இதுவரை  951 லிட்டர் பிராந்தி மற்றும் ரம், 410 லிட்டர் பீர், 17 ஆயிரத்து 675 லிட்டர் எரி சாராயம் போன்றவைகள் தேர்தல் பறக்கும் படையினரால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

அதுபோல ஆவணமின்றி எடுத்துச் எடுத்துச் செல்லப்பட்ட 128 கோடி ரூபாய் பறிமுதல் செய்யப் பட்டுள்ளதாகத் தெரிவித்த அவர், வேலூரில் பிடிபட்ட பணம் தொடர்பாக இந்திய தேர்தல் ஆணையம் இறுதி முடிவு எடுக்கும் என்றார்.

மேலும் காவல்துறையினர் தேர்தல் பணிகளுக்காக பல்வேறு இடங்களுக்கு செல்ல வேண்டிய திருப்பதால், வரும் 13-ஆம் தேதிவரை மாவட்ட வாரியாக  தபால் ஓட்டுப் பதிவு செய்யலாம் என்றும் கூறி உள்ளார்.

இதற்கிடையில் நாளை அனைத்து மாவட்ட ஆட்சியர்கள் மற்றும் எஸ்.பி.க்களுடன் வீடியோ கான்ஃபரன்ஸ் மூலம் தேரதல் ஆணையர் சத்தியபிரதா சாஹு ஆலோசனை நடத்த இருப்பபதாகவும் கூறப்பட்டுள்ளது.