போபால்
மழையை வேண்டி திருமணம் செய்து வைக்கப்பட்ட தவளைகள் வெள்ளம் வந்ததால் விவாகரத்து செய்விக்கப்பட்டுள்ளன.

மழையை வேண்டி பல பூஜைகளும் யாகங்களும் செய்வது இந்தியாவில் வழக்கமான ஒன்றாகும். பல இடங்களில் மழைக்காகப் பல வித்தியாச நிகழ்வுகளும் நடைபெறுவதும் உண்டு. அவ்வகையில் மத்தியப் பிரதேசத்தில் தவளைகளுக்குத் திருமணம் செய்து வைத்தால் மழை பெய்யும் என ஒரு நம்பிக்கை உள்ளது.
மத்தியப் பிரதேசத்தில் இந்த ஆண்டு தொடக்கம் முதலே கடும் வறட்சியான நிலை ஏற்பட்டது. அது கோடைக்காலத்தில் மிகவும் அதிகரித்தது. இதற்காக போபால் நகரில் உள்ள சிவசேவா சக்தி மண்டல் என்னும் அமைப்பு இரண்டு தவளைகளைப் பிடித்து திருமணம் செய்து வைத்தது.
சீதோஷ்ண சுழற்சியாலோ அல்லது தவளைகளின் மகிமையாலோ கடும் மழை பெய்ய ஆரம்பித்தது. அந்த மழை விடாமல் பெய்து மாநிலத்தின் பல இடங்களிலும் வெள்ளம் ஏற்பட்டது. பல பகுதிகளில் கடும் வெள்ள எச்சரிக்கை அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
எனவே இந்த கனமழையைத் தடுக்க மற்றொரு சடங்கு செய்யப்பட்டது. அதாவது திருமணமான இந்த இரு தவளைகளுக்கும் அதே சிவசேவா சக்தி மண்டல் அமைப்பு விவாகரத்து நடத்தி உள்ளது. இந்த இரு தவளைகளும் விவாகரத்துக்குப் பிறகு எங்கு உள்ளன என்பதை அமைப்பு தெரிவிக்க மறுத்துள்ளது..
[youtube-feed feed=1]