கோலாலம்பூர்:
ஓட்டுக்கு பணம் கொடுத்த தொகுதிகளில் மறுதேர்தல் நடத்த வேண்டும் என்று மலேசியாவின் புதிய பிரதமர் மகாதிர் முகமது தெரிவித்துள்ளார்.
மலேசியாவில் நடந்த நாடளுமன்ற தேர்தலில் பகதான் ஹரபான் கட்சி தலைமையிலான எதிர்கட்சிகள் கூட்டணி வெற்றி பெற்று ஆட்சி அமைத்துள்ளது. பிரதமரக மகாதிர் முகமது நேற்று பதவி ஏற்றார்.
பதவி ஏற்புக்கு பின்னர் அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.
அப்போது அவர் கூறுகையில், ‘‘தேர்தலில் ஊழல் மூலம் ஒருவர் வெற்றி பெற்றது தெரியவந்தால் வெற்றி செல்லாது என்று தேர்தல் கமிஷன் அறிவிக்க வேண்டும். கொள்கை காரணமாக கட்சி மாறும் அரசியல் வாதிகளை ஏற்றுக் கொள்வோம். ஆனால் அவர்கள் விலைக்கு வாங்கப்படுவதை ஏற்கமாட்டோம்.
தேர்தலில் ஊழல் சர்வசாதாரணமாக நடந்துள்ளதை தேர்தல் கமிஷன் கண்மூடித்தனமாக வேடிக்கை பார்த்துக் கொண்டு இருந்துள்ளது. எங்கு பார்த்தாலும் ஊழல் நடந்துள்ளது. நாங்கள் பழி வாங்கும் நடவடிக்கையை கையாளமாட்டோம். ஆனால், ஆதரவு பெற சிலர் பணத்தை பயன்படுத்தியிருப்பது தெரியவந்துள்ளது. பெரும்பான்மையை நிரூபிக்க கட்சி உறுப்பினர்களை விலைக்கு வாங்குவதும் ஊழல் தான்’’ என்றார்.
மகாதிர் முகமதுவின் பிஹெச் கட்சியுடன் நட்புறவில் உள்ள பார்தி வாரிசன் சபா கட்சி வாக்கு எண்ணி க்கையின் போது 35 தொகுதிகளில் வெற்றி பெற்றது. ஆனால், இரவோடு இரவாக நடந்த மறு வாக்கு எண்ணிக்கையில் இது 29ஆக குறைந்துள்ளது. இதனால் அவர்கள் ஆட்சி அமைக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளத என்று மகாதிர் தெரிவித்தார்.