கோவை: தமிழகத்தில் அடுத்த 3 நாட்களுக்கு தடுப்பூசி தட்டுப்பாடு இருக்காது என்று கூறிய அமைச்சர் மா.சுப்பிரமணியன், தனியார் மருத்துவமனைகளில் இலவச தடுப்பூசி போடுவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாக தெரிவித்து உள்ளார்.

தமிழக மக்களிடையே கொரோனா தடுப்பூசி எடுத்துக்கொள்வதில் ஆர்வம் மிகுந்துள்ளதால், பல இடங்களில் தடுப்பூசிகளுக்கு தட்டுப்பாடு எழுந்துள்ளது. இதனால், மத்தியஅரசிடம் கூடுதலாக தடுப்பூசிகளை ஒதுக்க மாநில அரசு வலியுறுத்தி வருகிறது. அதன்படி அவ்வப்போது மத்திய தொகுப்பில் இருந்து வரும் தடுப்பூசிகளை தமிழக அரசு மாவட்டங்களுக்கு பிரித்து அனுப்பி, பொதுமக்களுக்கு செலுத்தப்பட்டு வருகிறது.

தமிழகத்தில் இதுவரை 60 வயதுக்கு மேறபட்டோரில் 25.8% பேருக்கும், 45-60 வயதுக்கு உட்பட்டோரில் 34.2% பேருக்கும், 18-44 வயதுள்ளோர் 40% பேருக்கும் தடுப்பூசி செலுத்தப்பட்டு உள்ளதாக சுகாதாரத்துறை தெரிவித்து உள்ளது.மேலும், நேற்று வந்த 5 லட்சம் கோவிஷீல்டு தடுப்பூசிகள் மாவட்ட வாரியாக ஒதுக்கீடு செய்து அனுப்பி வைக்கப்பட்டு உள்ளது. அதைத் தொடர்ந்து இன்று சென்னை உள்பட பல மாவட்டங்களில் மீண்டும் தடுப்பூசி போடும் பணி நடைபெற்று வருகிறது.
இந்த நிலையில், “தனியார் மருத்துவமனைகளில் இலவச தடுப்பூசி திட்டத்தை”தொடங்குவது குறித்து கோவை,திருப்பூர்,ஈரோடு மற்றும் சேலம் ஆகிய மாவட்டங்களில் உள்ள தனியார் மருத்துவமனைகளுடனான கலந்தாலோசனை கூட்டம் நேற்று சிறப்பாக நடைபெற்றது.

இதையடுத்து, கோவையில், தனியார் மருத்துவமனையில் இலவச தடுப்பூசி திட்டத்தை தொடங்கி வைத்த மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறியதாவது,
“தமிழகத்துக்கு மேலும் 10 கோடி தடுப்பூசிகள் தமிழகத்திற்கு தேவைப்படுகிறது. அதுகுறித்து மத்தியஅரசிடம் வலியுறுத்தி உள்ளோம். அரசு சார்பில், இலவசமாக போடப்படும் தடுப்பூசிகளையே பொதுமக்கள் அதிகம் விரும்புகின்றனர். அதனால், சிஎஸ்ஐஆர் பங்களிப்புடன் தனியார் மருத்துவமனைகளில் இலவசமாக தடுப்பூசி போட தமிழக அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது.
தற்போதைய நிலையில், இன்னும் 3 நாட்களுக்கு தமிழகத்தில் கொரோனா தட்டுப்பாடு இருக்காது. தமிழகத்துக்கு மேலும் கோவிஷீல்டு கொரோனா தடுப்பூசிகள் வர இருக்கிறது.
இவ்வாறு அவர் கூறினார்.