சென்னை: அரசு, அரசு உதவி பெறும் தொடக்க, நடுநிலைப் பள்ளிகளில் சத்துணவு சாப்பிடும் மாணவர்கள் மற்றும் இலவச சீருடையில் விடுபட்ட விவரங்களை உடனே எமிஸ் தளத்தில் பதிவுசெய்ய வேண்டும் என பள்ளிக் கல்வித்துறை தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் உள்ள பள்ளி மாணவர்களின் தகவல்களை எமிஸ் (Education Management Information System) எனப்படும் கல்வி மேலாண்மை தகவல் அமைப்பின் மூலம் ஆன்லைனில் பள்ளிக் கல்வித்துறை பராமரித்து வருகிறது. இதில் பள்ளி மாணவ, மாணவிகளின் அடிப்படையான விவரங்கள், கல்வி உதவித்தொகை, மதிப்பெண்கள், அரசின் நலத்திட்ட உதவிகள், கலை திருவிழாக்களில் பங்கேற்பு உள்ளிட்ட பல்வேறு தகவல்களை பதிவேற்றம் செய்யப்படுகிறது. இந்நிலையில் அரசு, அரசு உதவி பெறும் தொடக்க, நடுநிலைப் பள்ளிகளில் சத்துணவு சாப்பிடும் மாணவர்களின் விடுபட்ட விவரங்களை உடனே எமிஸ் தளத்தில் பதிவுசெய்ய வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக தொடக்கக் கல்வித் துறை இயக்குநர் நரேஷ் அனைத்து மாவட்டக் கல்வி அலுவலர்களுக்கும் சுற்றிக்கை அனுப்பி உள்ளார். அதில் கூறியிருப்பதாவது,
: அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்கு அடுத்த கல்வியாண்டில் (2026-27) மாணவர்களுக்கு இலவச சீருடை வழங்குவதற்காக அளவெடுக்கும் பணிகள் மேற்கொள்ளப்பட இருக்கின்றன. அதன் விவரங்கள் எமிஸ் தளத்தில் இருந்து எடுத்துக் கொள்ளப்பட இருக்கிறது. அதேநேரம் முந்தைய 2025-26ம் கல்வியாண்டில் சில மாணவர்களின் விவரங்கள் எமிஸ் தளத்தில் இருந்து விடுபட்டுள்ளன.
EMISஇல் இருந்து பெறப்பட்ட மின்னஞ்சலின்படி, 2026-2027 ஆண்டிற்கு விலையில்லாச் சீருடை வழங்க அளவெடுக்கும் பணி மேற்கொள்ள ஏதுவாக, 2025-2026ம் கல்வியாண்டில் 1 முதல் 7ம் வகுப்பு வரை பயிலும் சத்துணவு உண்ணும் மாணவ மற்றும் மாணவிகளின் விவரங்கள் விடுபட்டுள்ளது எனவும், விடுபட்ட விவரங்களை EMIS தளத்தில் உள்ளீடு செய்யுமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
எனவே, தொடக்கக் கல்வி இயக்கக நிர்வாகத்தின் கீழ் செயல்படும் அரசு மற்றும் அரசு உதவிபெறும் தொடக்க மற்றும் நடுநிலைப்பள்ளிகளில் 1 முதல் 7ம் வகுப்பு வரை பயிலும் சத்துணவு உண்ணும் மாணவ, மாணவிகளின் விடுபட்ட விவரங்களை நேற்று காலை 11 மணிக்குள் EMIS தளத்தில் உடனடியாக உள்ளீடு செய்யுமாறு அனைத்து வட்டாரக் கல்வி அலுவலர்கள் மூலம் பள்ளித் தலைமை ஆசிரியர்களுக்கு அறிவுரை வழங்கிடுமாறு அனைத்து மாவட்டக் கல்வி அலுவலர்களுக்கும் தெரிவிக்கப்பட்டது.
மேலும் மேற்குறிப்பிட்ட பொருள் சார்ந்து EMIS portal-ல் உள்ளீடு (Yes or No) செய்யப்படாத கல்வி மாவட்டங்களை இணை இயக்குநர் (உதவி பெறும் பள்ளிகள்) அவர்கள் Google Meet மூலம் இன்று மாலை 3.00 மணியளவில் ஆய்வு செய்வார் என அனைத்து மாவட்டக் கல்வி அலுவலர்களுக்கும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக, அனைத்து மாவட்டக் கல்வி அலுவலர்களுக்கும் னுப்பிய சுற்றறிக்கை இதையடுத்து அரசு, அரசு உதவி பெறும் தொடக்க, நடுநிலைப் பள்ளிகளில் சத்துணவு சாப்பிடும் மாணவர்களின் விடுபட்ட விவரங்களை உடனே எமிஸ் தளத்தில் பதிவுசெய்ய வேண்டும்.
[youtube-feed feed=1]