விழுப்புரம்: விழுப்புரம் மாவட்டத்தில் 1,635 பேருக்கு இலவச வீட்டுமனை பட்டாவை அமைச்சர் சி.வி.சண்முகம் வழங்கினார். அதன்படி, விழுப்புரம், மரக்காணம், வானூரில் பகுதியைச் சேர்ந்த பலர் பயனடைந்தனர்.
ஆட்சேபகரமற்ற அரசு புறம்போக்கு நிலங்களில் நீண்டகாலமாக வசித்து வரும் ஏழை, எளியோருக்கு வருவாய் மற்றும் பேரிடர் துறை சார்பில் ‘தமிழ் நிலம்’ இணைய முகப்பு வழியாக இலவச வீட்டுமனைப் பட்டா மற்றும் ஆதிதிராவிடர் குடியிருப்புகளுக்கு இணைய வழி சிட்டா வழங்கும் விழா விழுப்புரம் பெருந்திட்ட வளாகத்தில் நடைபெற்றது.
இந்த விழாவுக்கு மாவட்ட கலெக்டர் ஆ.அண்ணாதுரை தலைமை வகித்தார். கூடுதல் ஆட்சியர் ஸ்ரேயா பி.சிங் வரவேற்றார். விழாவில், அமைச்சர் சி.வி.சண்முகம் கலந்து கொண்டு, 558 பயனாளிகளுக்கு இலவச வீட்டுமனைப் பட்டா, சிட்டாக்களை வழங்கினார்.
இதேபோல, மரக்காணத்தில் நடைபெற்ற விழாவில் 895 பயனாளிகளுக்கும், வானூரில் நடைபெற்ற விழாவில் 182 பயனாளிகளுக்கும் இலவச வீட்டுமனைப் பட்டா மற்றும் சிட்டாக்கள் என மொத்தம் 1,635 பயனாளிகளுக்கு இலவச வீட்டுமனைப் பட்டா, சிட்டாக்கள் வழங்கப்பட்டன.
மேலும் விழுப்புரம் மாவட்ட கலெக்டர் கூட்ட அரங்கில் மாற்றுத் திறனாளிகள் நலத் துறை சார்பில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பார்வைத் திறன், செவித் திறன் பாதிக்கப்பட்ட 101 மாற்றுத்திறனாளிகளுக்கு தலா ரூ.12,799 மதிப்பிலான அறிதிறன் பேசிகளை அமைச்சர் சி.வி.சண்முகம் வழங்கினார்.
இந்த நிகழ்ச்சிகளில் எம்.எல்.ஏ.-க்கள் முத்தமிழ்ச்செல்வன் (விக்கிரவாண்டி), சக்கரபாணி (வானூர்), திண்டிவனம், சார் -ஆட்சியர் எஸ்.அனு உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.