திருவனந்தபுரம்
கேரள மாநிலத்தில் அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி இலவசமாக வழங்கப்படும் என முதல்வர் பினராயி விஜயன் அறிவித்துள்ளார்.
இந்தியாவில் முதல் கொரோனா நோயாளி கேரளாவில் கண்டறியப்பட்டார். அதன் பிறகு அம்மாநிலத்தில் கொரோனா வேகமாகப் பரவியது. அகில இந்திய அளவில் அதிகமான கொரோனா நோயாளிகளைக் கொண்டிருந்த கேரள மாநிலத்தில் அரசு நடவடிக்கையால் கொரோனா பாதிப்பு மிகவும் குறைந்தது.
இதையொட்டி கேரள அரசுக்குப் பலரும் புகழாரம் சூட்டி மகிழ்ந்தனர், ஆனால் கடந்த சில நாட்களாக அங்கு மீண்டும் கொரோனா அதிக அளவில் பரவி வருகிறது. தற்போதைய நிலையில் கேரளாவில் 6.64 லட்சத்துக்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர்,
தற்போது கொரோனா தடுப்பு மருந்துகள் வெளிவரத் தொடங்கி உள்ளன.
இது குறித்து கேரள முதல்வர் பினராயி விஜயன், “விரைவில் மத்திய அரசு கொரோனா தடுப்பூசியை மாநிலங்களுக்கு வழங்க உள்ளது. இதில் கேரளத்துக்கு எவ்வளவு அளிக்கப்படும் என்பது தெரியவில்லை.
கேரளாவில் உள்ள அனைவருக்கும் இலவச கொரோனா தடுப்பூசி வழங்கப்பட உள்ளது. கேரளாவில் கொரோனா பாதிப்புக்கள் மீண்டும் சிறிது சிறிதாக குறைந்து வருகின்றன. விரைவில் அது மேலும் குறையும்” என்ப தெரிவித்துள்ளார்.