கொல்கத்தா: மேற்குவங்க மாநிலத்தில் இன்று 4வது கட்ட வாக்குப்பதிவு நடைபெற்ற வரும் நிலையில், அங்கு ஏற்பட்ட வன்முறையின்போது பாதுகாப்பு படையினர் நடத்திய துப்பாக்கி சூட்டில் 4 பேர் சுட்டுக்கொல்லப்பட்டனர். இதனால், அங்கு பரபரப்பு நிலவி வருகிறது.
மேற்கு வங்கத்தில் இன்று 44 தொகுதிகளுக்கு 4வது கட்ட தேர்தல் வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. இந்த நிலையில், கூச் பெஹார் மாவட்டத்தில் உள்ள சிதால்குச்சி வாக்குச்சாவடிக்கு வாக்களிக்க வந்த இளைஞரை, அடையாளம் தெரியாத நபர்கள் சிலர் சுட்டுக் கொன்றதாக கூறப்படுகிறது. இதனால், அங்கு பரபரப்பு ஏற்பட்டது. இந்த துப்பாக்கி சூடுக்கு பின்னணியில் பாஜக இருப்பதாக திரிணாமுல் கட்சியினர் குற்றம் சாட்டினர். இதற்கு பாஜகவினர் கண்டனம் தெரிவித்த நிலையில், இரு தரப்பினருக்கும் இடையே மோதல் ஏற்பட்டு, வாக்குச்சாவடிக்கு வெளியே குண்டு வீசப்பட்டது.
இதுகுறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு வந்த மத்திய பாதுகாப்புப் படையினர், துப்பாக்கிச் சூடு தாக்குதல் நடத்தி நிலைமையைக் கட்டுப்படுத்தினர். இதில், நான்கு பேர் சுட்டுக்கொல்லப்பட்டனர். இதனால், அங்கு பதற்றமான நிலைமை நிலவிவருகிறது.
காவல் துறையினரும், சிஆர்பிஎஃப் வீரர்களும் குவிக்கப்பட்டுள்ளனர்.மேலும், அங்கு வந்த பாஜக வேட்பாளர் லாக்கெட் சட்டர்ஜி என்பவரின் காரும் வன்முறையில் அடித்து நொறுக்கப்பட்டுள்ளது. பல ஊடகங்களின் வாகனங்களும் வன்முறையாகர்களால் அடித்து நொறுக்கப்பட்டது.
இந்த வன்முறைச் சம்பவம் குறித்து அறிக்கைத் தாக்கல்செய்ய மாநிலத் தலைமைத் தேர்தல் அலுவலருக்குத் தேர்தல் ஆணையம் உத்தரவிட்டிருக்கிறது.