மயூர்பன்ச், ஒரிசா
ஒரிசாவில் ஊர்க்காவல் படையை சேர்ந்த நால்வருக்கு முட்டி போடும் தண்டனை அளித்த ஆய்வாளருக்கு எஸ்பி விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.
ஒரிசா மாநிலத்தில் போலீசுக்கு உதவியாக ஊர்க்காவல் படையினர் பணி புரிந்து வருகின்றனர். இவர்களை தேர்தல், மற்றும் ஊரில் நடக்கும் விழாக்களின் சமயத்தில் போலீசுக்கு உதவி செய்ய அழைப்பார்கள். இது இவர்களுக்கு நிரந்தரப் பணி அல்ல.
ஒரிசா மாநிலத்தில் பாரிபாடா நகரை சேர்ந்த ஊர் மயூர்பன்ச். மயூர் பஞ்ச் பகுதியில் நடந்த ஒரு தேர்த்திருவிழாவுக்கு ஊர்க்காவல் படையினரை பணியில் அமர்த்தியுள்ளனர். அதில் நால்வர் (மூன்று ஆண்கள், ஒரு பெண்) சீருடை இல்லாமல் கூட்டத்தை கட்டுப்படுத்தும் பணியை செய்துள்ளனர்.
இதற்காக ஆய்வாளர் அஷோக் சேத்தி என்பவர் அந்த நால்வருக்கும் முட்டி போடும் தண்டனை அளித்துள்ளார். இதை யாரோ புகைப்படம் எடுத்து இணைய தளத்தில் வெளியிட இந்த புகைப்படம் வைரலாக பரவியது. புகைப்படத்தில் மூன்று ஆண்களும், ஜீப்புக்கு பின்னால் ஒரு பெண்ணும் மண் தரையில் முட்டி போட்டிருப்பது அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
மீடியாக்களில் புகைப்படத்தை பார்த்த எஸ் பி பிரகாஷ் இந்த தண்டனையை அளித்த சேத்தி, மற்றும் அவருடைய உயர் அதிகாரிகளுக்கு இதற்கு உடனடியாக விளக்கம் அளிக்குமாறு நோட்டிஸ் கொடுத்துள்ளார். இன்றுவரை அதற்கு எந்த பதிலும் வரவில்லை.