சென்னை: சென்னையில் ஆகஸ்ட் 31ம் தேதி ஃபார்முலா 4 கார் பந்தயம்  நடைபெற உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.  ஏற்கனவே தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் மற்றும் இந்தியன் ரேஸிங் சூப்பர் லீக் என்ற அமைப்பும் சேர்ந்து, மூன்று ஆண்டுகளுக்கு சென்னையில் ஃபார்முலா 4 கார்பந்தயம் நடத்த திட்டமிட்டு இருக்கிறது.

கடந்த ஆண்டு (2023) சென்னையின் மையப்பகுதியில்  இந்த கார் பந்தயம்  நடத்துவதற்கு  எதிர்ப்பு தெரிவித்து வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டு சர்ச்சைக்குள்ளானது. இதனால், கார் பந்தயம் நடைபெறுவது ஒத்தி வைக்கப்பட்டது. இந்த நிலையில் மீண்டும் சென்னையில் கார்ப்நதயம் நடத்த  ஏற்பாடு நடைபெற்று வருவதாக தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணைய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

மக்கள் நெருக்கம், வாகன நெரிசல் காணப்படும் சென்னையில் பார்முலா கார் பந்தயத்தை நடத்த திமுக அரசு முனைப்பு காட்டி வருகிறது. ஏற்கனவே கடந்த ஆண்டு (2023)  சென்னை தீவுத்திடலை சுற்றி டிசம்பர் 9, 10 தேதிகளில் ஃபார்முலா 4 கார் பந்தய போட்டியை நடத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டது. மேலும் தெற்காசியாவில் முதன்முறையாக இரவுநேர தெரு பந்தயமாக நடத்தப்படுவதாக கூறி, சென்னை கடற்கரை சாலை, அண்ணா சாலைகளில் நடுவே இருந்த சாலை தடுப்புகள் அகற்றப்பட்டு, கார் பந்தயத்துக்கு தேவையான நடவடிக்கைகள் பல கோடி ரூபால் மேற்கொள்ளப்பட்டன. இந்த நடவடிக்கை சென்னைவாசிகளிடையே கடுமையான விமர்சனங்களை ஏற்படுத்தியது.

மேலும், சென்னையில் கார் பந்தயம் நடத்த பூந்தமல்லி அருகே ள்ள இருங்காட்டுக்கோட்டையில் தனி பந்தய தளம் இருக்கும் நிலையில், சென்னையின் மையப்பகுதியான தீவுத்திடல் மட்டுமல்லாமல் சென்னை நகரில் இந்த கார் பந்தயத்தை நடத்த தடை விதிக்க கோரி சென்னை தண்டையார்பேட்டையை சேர்ந்த மருத்துவர் ஸ்ரீஹரிஷ் என்பவர்  உயர்நீதி மன்றத்தில் பொதுநல வழக்கு தாக்கல் செய்தார். இந்த வழக்கின் விசாரணையின்போது உயர்நீதிமன்றத்தின் கடுமையான கேள்விகளாலும், மேலும் அந்த கால கட்டத்தில் மிக்ஜாம் புயல் பாதிப்பும் எற்பட்டது.  தமிழ்நாடு அரசு கார்பந்தயம் நடத்துவதை ஒத்தி வைத்தது. பின்னர் வழக்கின் விசாரணையைத் தொடர்ந்து, பல்வேறு கட்டுப்பாடுகளுடன் போட்டி நடத்த அனுமதி வழங்கியது.

இந்த நிலையில், மீண்டும் ஃபார்முலா கார் பந்தய போட்டியை நடத்த  அமைச்சர் உதயநிதியின் கீழ் செயல்படும் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் முயற்சிகள் மேற்கொண்டுள்ளது.  வரும் ஆகஸ்ட் 31 மற்றும் செப்டம்பர் 1ம் தேதிகளில், ஃபார்முலா 4 கார்பந்தயம் நடைபெறும் என தகவல் வெளியாகியுள்ளது.

இந்தியாவில் முதல்முறையாக ஃபார்முலா ரேஸிங் சர்க்யூட் நடைபெற உள்ளது. ஸ்ட்ரீட் சர்க்யூட் பந்தயங்களான ஃபார்முலா-4 பந்தயம், சென்னை தீவுத் திடல் மைதானத்தை சுற்றியுள்ள 3.5 கி.மீ சுற்றளவு கொண்ட சாலையில் இரவு போட்டியாக நடத்தப்பட உள்ளது. அதன்படி, தீவுத்திடலில் தொடங்கும் கார் பந்தயமானது அண்ணா சாலை, சிவானந்த சாலை, நேப்பியர் பாலம் வழியாக மீண்டும் தீவுத்திடலை சென்றடைவது போல இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

ஏற்கனவே இந்த  போட்டிக்கான கட்டணமாக, “ப்ரீமியம் ஸ்டாண்ட் ஒரு நாள் டிக்கெட் கட்டணம் 3,999 ரூபாய், இறுதி நாட்களுக்கான டிக்கெட் கட்டணம் 6,999 ரூபாய், கிரான்ட் ஸ்டாண்ட் 1,2,3,4,5 டிக்கெட் கட்டணம் 1,999 ரூபாய், கிரான்ட் ஸ்டாண்ட் வார இறுதி நாட்களுக்கான டிக்கெட் கட்டணம் ரூபாய் 2,499 , Gold Lounge ஒரு நாள் டிக்கெட் கட்டணம் 7,999, வார இறுதி நாட்களில் Gold Lounge டிக்கெட்டின் விலை 13,999 ரூபாய்க்கும், Platinum Lounge கட்டணம் 12,999 மற்றும் வார இறுதி நாட்களில் 19,999 ரூபாய்” எனவும் விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் அறிவித்திருந்தது. அதே கட்டணம் இந்தமுறையும் வசூலிக்கப்பட வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது.

இந்த ரேசில், இந்தியா மற்றும் வெளிநாடுகளைச் சேர்ந்த முன்னணி வீரர், வீராங்கனைகள் பங்கேற்க உள்ளனர். எனவே, இந்த போட்டியை நடத்த தமிழ்நாடு அரசு ரூ.40 கோடி ஒதுக்கீடு செய்தது.

ஏற்கனவே நடைபெற்ற  பார்முலா கார் பந்தயம் தொடர்பான வழக்கின் விசாரணையின்போது,  250 கிலோமீட்டர் வேகத்தில் பந்தய கார்கள் செல்லும்போது, இந்த பந்தயம் நடைபெறும் பகுதியில்  உள்ள ஓமந்தூரார் பல்நோக்கு மருத்துவமனையில் உள்ள நோயாளிகளுக்கு பாதிப்பு ஏற்படும் என்றும்,   கார் பந்தயத்தால்,  130 டெசிபல் ஒலி மாசு ஏற்படும் என்பதால்,  மருத்துவ சிகிச்சை பெறுபவர்களை பாதிக்கும் என குற்றம்சாட்டப்பட்டது.

ஆனால், அதற்கு பதில் அளித்த அரசு,  பன்நோக்கு சிறப்பு மருத்துவமனையிலிருந்து 50 மீட்டர் தூரத்தில் பந்தயம் நடக்க இருப்பதாகவும், அப்பகுதியில் ஒலி மாசை ஏற்படுத்தக்கூடாது என்றும், பொதுமக்கள் பாதுகாப்பு பரிசீலிக்கப்படாமல் நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது.

தமிழக அரசு தரப்பில், தெரு பந்தயமாக இரண்டு நாட்கள் மட்டும் மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரை நடத்தப்பட உள்ளதாகவும், அனைத்து பாதுகாப்பு  வழிமுறைகளும் பின்பற்றப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டது.  மேலும்,  பார்முலா 1,2,3வுடன் ஒப்பிடும் போது பார்முலா 4 அதிக பாதிப்பை ஏற்படுத்தாது. மருத்துவமனையின் கதவுகள் மூடப்படாது எனவும், யாருக்கும் பாதிப்பு இல்லை எனவும், 98 டெசிபல் அளவுதான் ஒலி எழுப்பப்படும் எனவும், 12 வாகனங்கள் மட்டுமே போட்டியில் பங்கேற்கின்றன எனவும் தெரிவிக்கப்பட்டது. அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது.

அரசு மருத்துவமனையின் நோடல் அதிகாரியான மருத்துவர் ஆனந்த் குமார் ஆஜராகி பந்தய வழித்தடம் மருத்துவமனையிலிருந்து 200 மீட்டருக்கு அப்பால் உள்ளதால் நோயாளிகளுக்கு பாதிப்பு ஏதும் இருக்காது என உறுதி அளித்தார்.

இதையடுத்து காவல்துறை, தீயணைப்பு, ராணுவம், கடற்படை ஆகியவற்றின் அனுமதி கடிதங்களை தாக்கல் செய்ய அரசு தரப்பு உத்தரவிட்ட நீதிபதிகள், பின்னர் பல்வேறு கட்டுப்பாடுகளுடன் அனுமதி வழங்கினர்.