“தற்போதைய சூழ்நிலையில் எனது கண்ணியத்திற்கு ஏற்ப கட்சிக்கு வெளியில் இருந்து செயலாற்றுவதே சிறந்தது என முடிவுக்கு வந்துள்ளேன்” என்று காங்கிரஸ் தலைவர் சோனியா காந்திக்கு முன்னாள் மத்திய சட்ட அமைச்சர் அஸ்வனி குமார் கடிதம் எழுதியுள்ளார்.

2012-2013ல் மன்மோகன் சிங் அமைச்சரவையில் மத்திய சட்ட அமைச்சராகப் பணியாற்றிய அஸ்வனி குமார், காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகுவதாக இன்று அறிவித்துள்ளார். இதன் மூலம் காங்கிரஸ் கட்சியுடனான தனது 46 ஆண்டுகால தொடர்பை முறித்துக் கொண்டார்.

காங்கிரஸ் தலைவர் சோனியா காந்திக்கு அவர் எழுதியுள்ள கடிதத்தில், தேச நலனுக்காக கட்சிக்கு வெளியே இருந்து சிறந்த முறையில் பணியாற்ற முடியும்.

“இந்த விஷயத்தை எனது சிந்தனையுடன் பரிசீலித்ததன் மூலம், தற்போதைய சூழ்நிலையிலும், எனது கண்ணியத்திற்கு இசைவாகவும், கட்சிக்கு வெளியே பெரிய தேசிய காரணங்களை என்னால் சிறப்பாக கையாள முடியும் என்று முடிவு செய்துள்ளேன்” என்று அஸ்வனி குமார் குறிப்பிட்டுள்ளார்.

“நான் 46 ஆண்டுகால நீண்ட பயணத்திற்குப் பிறகு கட்சியை விட்டு வெளியேறுகிறேன். எனது மரியாதைக்குரிய வணக்கங்களைச் செலுத்தும் அதே வேளையில், கடந்த காலத்தில் எனக்கு வழங்கப்பட்ட பொறுப்புகளுக்கு நன்றி சொல்ல கடமைப்பட்டிருக்கிறேன் மேலும் வரும் ஆண்டுகளில் நீங்கள் நல்ல ஆரோக்கியத்துடன் இருக்க வாழ்த்துகிறேன்,” என்று அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

சமீப காலமாக காங்கிரஸ் கட்சியில் இருந்து ஏராளமான தலைவர்கள் விலகிவரும் நிலையில், ஐந்து மாநில சட்டமன்றத் தேர்தல் நடைபெற்று வரும் வேளையில் அஸ்வனி குமார் வெளியேறி இருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.