கொழும்பு:  இலங்கையின் முன்னாள் அதிபர் ரணில் விக்ரமசிங்கேவை  தற்போதைய இலங்கை அதிபர் அநுர குமார திசாநாயகே அரசு அதிரடியாக கைது செய்துள்ளது. இது  இலங்கை அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

ரணில் விக்ரமசிங்கே  அதிபராக இருந்தபோது,  அரசு நிதியை தவறாக பயன்படுத்திய குற்றச்சாட்டில்   கைது செய்யப்பட்டு இருப்பதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.

இலங்கை பிரதமராக 1993 முதல் 2022-ம் ஆண்டு வரை பல்வேறு காலகட்டங்களில் 5 முறை பதவி வகித்தவர் ரணில் விக்ரமசிங்கே. மேலும் இவர் அதிபராக 2022-ம் ஆண்டு ஜூலை 21 முதல் 2024-ம் ஆண்டு செப்டம்பர் 23-ம் தேதி பதவி வகித்துள்ளார்  கடந்த 2023-ம் ஆண்டு செப்டம்பர் 22, 23 தேதிகளில் தனது மனைவியின் பட்டமளிப்பு விழாவில் கலந்து கொள்வதற்காக மனைவியுடன், ரணில் விக்ரமசிங்கே லண்டன் சென்றார். அப்போது அவருடன் 10 பேர் சென்றதாகவும், இதற்காக இலங்கை அரசின் நிதி 17 மில்லியன் செலவிடப்பட்டதாகவும் அவர் மீது குற்றச்சாட்டு எழுந்தது.

ஆனால், லண்டன் பயணத்திற்கான அனைத்து செலவுகளையும் தனது மனைவியே செலுத்தியாக ரணில் விக்ரமசிங்கே மறுத்து வந்தார். இது சம்மந்தமாக அவரிடம் இலங்கை சிஐடி அதிகாரிகள் நேரில் விசாரணை நடத்தினர். விசாரணை நிறைவடைந்த நிலையில், அவரை குற்றப்புலனாய்வு அதிகாரிகள் கைது செய்தனர்.

முன்னதாக,  இது தொடர்பாக சிஐடி அலுவலகத்தில்   நேரில் ஆஜராக ரணில் விக்ரமசிங்கேவுக்கு சம்மன் அனுப்பப்பட்டிருந்தது. இதனையடுத்து அவர் சிஐடி அலுவலகத்தில் ஆகஸ்டு 22ந்தேதி (நேற்று)   ஆஜரானார். அப்போது சிஐடி போலீசார் அவரிடம் பல்வேறு கேள்விகளை கேட்டதாகக் கூறப்படுகிறது. ஆனால் விசாரணை முடிவடைந்த நிலையில், ரணில் விக்ரமசிங்கே கைது செய்யப்பட்டதாக அறிவிக்கப்பட்டது.

ரணில் விக்ரமசிங்கே கைது செய்யப்பட்டது அவரது ஆதரவாளர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. . இந்த கைது நடவடிக்கையால் இலங்கை அரசியலில் உச்சகட்ட பரபரப்பு ஏற்பட்டுள்ளது.