சென்னை: முன்னாள் சபாநாயகர் சேடப்பட்டி முத்தையா உடல் நலக்குறைவால் காலமானார். அவருக்கு வயது 77.

மறைந்த ஜெயலலிதா தலைமையிலான அதிமுக ஆட்சியின்போது சட்டப்பேரவை தலைவராக இருந்தவர் சேடப்பட்டி முத்தையா.  கட்சி தலைமை மீதான அதிருப்தி காரணமாக கடந்த 2006ம் ஆண்டு அதிமுகவில் இருந்து விலகி,  திமுகவில் இணைந்தார்.  அவருக்கு திமுக தலைமை, தேர்தல் பணிக்குழு தலைவர் பதவி வழங்கி கவுரவித்தது.

இந்த நிலையில்,  சேடப்பட்டி முத்தையாவுக்கு அண்மையில் உடல்நலக்குறைவு ஏற்பட்டது. இதன் காரணமாக அவர் மதுரையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார்.  சிகிச்சை பலனின்றி அவர் காலமானாக அறிவிக்கப்பட்டு உள்ளது.

சேடப்பட்டி முத்தையா, 1991 முதல் 1996 வரை அதிமுக ஆட்சி காலத்தில் தமிழக சட்டப்பேரவை தலைவராக பதவி வகித்தவர் . 1999-ம் ஆண்டு வாஜ்பாய்  பிரதமராக இருந்தபோது மத்திய தரைவழி போக்குவரத்துத்துறை அமைச்சராக பதவி வகித்தார்.  நான்கு முறை சட்டமன்ற உறுப்பினராகவும், இரண்டு முறை நாடாளுமன்ற உறுப்பினராகவும் பொறுப்பு வகித்தவர். சேடப்பட்டி முத்தையாவுக்கு சகுந்தலா என்ற மனைவியும், இரண்டு மகள்களும், இரண்டு மகன்களும் உள்ளனர்.