இந்திய ரிசர்வ் வங்கியின் முன்னாள் ஆளுநர் சக்திகாந்த தாஸுக்கு முக்கிய பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது.

பிரதமர் நரேந்திர மோடியின் முதன்மைச் செயலாளர்-2 ஆக அவர் நியமிக்கப்பட்டுள்ளார். மறு உத்தரவு வரும் வரை அவர் இந்தப் பதவியில் நீடிப்பார் என்று அமைச்சரவையின் நியமனக் குழு (ACC) தெரிவித்துள்ளது.

ரிசர்வ் வங்கி ஆளுநராக 6 ஆண்டுகள் பணியாற்றிய சக்திகாந்த தாஸ் டிசம்பர் 2024 இல் ஓய்வு பெற்றார்.

2019 செப்டம்பர் 11, முதல் பிரதமர் நரேந்திர மோடியின் முதன்மைச் செயலாளராக பி.கே. மிஸ்ரா இருந்து வருகிறார்.

இந்திய அரசு அதன் பொருளாதாரக் கொள்கைகள் மற்றும் நிதி நிர்வாகத்தை வலுப்படுத்துவதில் கவனம் செலுத்தி வரும் நேரத்தில் சக்திகாந்த தாஸுக்கு இந்த பொறுப்பு வழங்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

ஒடிசாவின் தலைநகரான புவனேஸ்வரைச் சேர்ந்த சக்திகாந்த தாஸ் 1980 ஆம் ஆண்டு தமிழ்நாடு கேடரில் IAS அதிகாரியாக தேர்வு செய்யப்பட்டார். தனது பணிக்காலத்தில், மத்திய மற்றும் தமிழ்நாடு அரசுகளில் பல்வேறு பதவிகளில் பணியாற்றினார்.

மத்தியில், அவர் பொருளாதார விவகார செயலாளராகவும், வருவாய் செயலாளராகவும், உரச் செயலாளராகவும் பல்வேறு கட்டங்களில் பணியாற்றினார்.

இந்திய ரிசர்வ் வங்கியின் 25வது ஆளுநராக 2018ல் சக்திகாந்த தாஸ் பதவியேற்றார், 2021 ஆம் ஆண்டில், மத்திய அரசு அவருக்கு மூன்று ஆண்டு பதவி நீட்டிப்பு வழங்கியது.

ரிசர்வ் வங்கி ஆளுநரைத் தவிர, மத்திய மற்றும் மாநில அரசுகளில் நிதி, வரிவிதிப்பு, தொழில்துறை, உள்கட்டமைப்பு போன்ற துறைகளில் முக்கிய பதவிகளை வகித்துள்ளார்.

முதன்மைச் செயலாளர்-2 ஆக, முக்கிய பொருளாதார மற்றும் நிதி விஷயங்களில் ஆலோசனைகளை வழங்குவதில் சக்திகாந்த தாஸ் முக்கிய பங்கு வகிப்பார், இது அரசாங்கத்தின் முடிவெடுக்கும் கட்டமைப்பை மேலும் வலுப்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.