டெல்லி: முன்னாள் பிரதமர் மன்மோகன்சிங் காலமானார்.  அவருக்கு வயது 92.

வயது முதிர்வு காரணமாக உடல்நலம் பாதிக்கப்பட்டு வீட்டிலிருந்தே சிகிச்சை பெற்று வந்த நிலையில்,, இன்று திடீரென உடல்நலப் பாதிப்பு ஏற்பட்டதால்,   இரவு 8.06 மணிக்கு டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனை யின் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்ட மன்மோகன்சிங்,  சிகிச்சை பலனின்றி,  இரவு 9.51 மணிக்கு காலமானாதாக தகவல் வெளியாகி உள்ளது.

மன்மோகன் சிங் உயிரிழந்த செய்தியை காங்கிரஸ் எம்பி பிரியங்கா காந்தியின் கணவர் ராபர்ட் வத்ரா ஏற்கனவே உறுதி படுத்திய நிலையில், திடீரென அவரது பதிவு டெலிட் செய்யப்பட்டதால், மன்மோகன் சிங் உடல்நிலை குறித்து சலசலப்பு ஏற்பட்டது.  தற்போது,  இந்தியாவின் முன்னாள் பிரதமர் டாக்டர் மன்மோகன்சிங் டெல்லியில் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனையின் சிகிச்சை பலனின்றி காலமானதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டு உள்ளது.

மன்மோகன் சிங் உயிரிழந்த செய்தியை அறிந்த காங்கிரஸ் தலைவர்கள் டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் குவிந்து வருகின்றனர். இதையொட்டி அங்கு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு உள்ளது.

ந்தியாவின் பிரதமராக 2004 மே முதல் 2014 மே வரை 10 ஆண்டுகளாக பதவியில்   இருந்த மன்மோகன் சிங்கிற்கு தற்போது 92 வயது. கடந்த சில ஆண்டுகளாக உடல்நலம் பாதிக்கப்பட்ட நிலையில், சக்கர நாற்காலியில் வந்து நிகழ்ச்சிகளில் பங்கேற்று வந்தார். மேலும் தீவிர அரசியலில் இருந்து ஒதுங்கி இருந்தார். இந்த நிலையில், அவர் இன்று இரவு காலமானார்.

மன்மோகன் சிங். 1932ஆம் ஆண்டு செப்டம்பர் 26-ஆம் தேதி பிரிக்கப்படாத பிரிட்டிஷ் இந்தியாவில் கா எனும் கிராமத்தில் பிறந்தவர்.  தற்பொழுது அந்த கிராமம் பாகிஸ்தானில் உள்ள பஞ்சாப் மாகாணத்தில் உள்ளது. தேசப் பிரிவினைக்கு பின் பாகிஸ்தானில் இருந்து இந்தியாவுக்கு குடிபெயர்ந்த பல லட்சம் இந்து மற்றும் சீக்கிய குடும்பங்களில் இவரது குடும்பமும் ஒன்று.

அமிர்தசரஸில் உள்ள இந்து கல்லூரி, பஞ்சாப் பல்கலைக்கழகம், பிரிட்டனில் உள்ள கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகம் ஆகியவற்றில் உயர் கல்வி கற்ற மன்மோகன் சிங் 1962இல் ஆக்ஸ்ஃபோர்டு பல்கலைக்கழகத்தில் பொருளாதாரத்தில் முனைவர் பட்டம் பெற்றார்.

கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் படித்தபோது கௌரவம் மிக்க ஆடம் ஸ்மித் பரிசை வென்றவர் சிங்.

1971ம் ஆண்டு இந்திய  வர்த்தக அமைச்சகத்தின் ஆலோசகராக அரசுப் பணியில் சேர்ந்தார். ஒரே ஆண்டிலேயே அவருக்கு அடுத்த முக்கியப் பதவி கிடைத்தது. 1972இல் நிதி அமைச்சகத்தின் தலைமை பொருளாதார ஆலோசகராக நியமிக்கப்பட்டார் மன்மோகன் சிங். 1982 முதல் 1985 வரை இந்திய ரிசர்வ் வங்கியின் ஆளுநராகவும் 1985 முதல் 1987 வரை திட்ட கமிஷனின் துணைத் தலைவராகவும் பதவி வகித்தவர்.

 பின்னர் மறைந்த பிரதமர்,  நரசிம்ம ராவ் ஆட்சிக் காலத்தில் இந்திய நிதி அமைச்சராக இருந்தார் மன்மோகன் சிங் 1991-ஆம் ஆண்டு காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்று நரசிம்மராவ் தலைமையில் ஆட்சி அமைக்கப்பட்ட போது அந்நியச் செலாவணி பற்றாக்குறை போன்ற கடுமையான பொருளாதார நெருக்கடியில் இந்தியா இருந்தது. அந்த காலகட்டத்தில் அரசியல் பதவி எதையும் வகிக்காத மன்மோகன்சிங் நரசிம்ம ராவ் தலைமையிலான அமைச்சரவையில் நிதி அமைச்சராகப் பொறுப்பேற்றார்.

இந்திய பொருளாதார சீர்திருத்தத்தின் மூளையாக கருதப்படும் மன்மோகன் சிங், 1991-1996 ஆட்சிக் காலத்தில் நரசிம்ம ராவ் உடன் இணைந்து இந்தியாவில் உலகமயம், தாராளமயம், தனியார்மயம் ஆகியவற்றை அமலாக்கினார்.

சிறந்த நிதி அமைச்சருக்கான ‘ஆசியா மணி அவார்ட்’ (Asia Money Award for Finance Minister of the Year) விருதை 1993, 1994 ஆகிய ஆண்டுகளிலும், ‘யூரோ மணி அவார்ட்’ (Euro Money Award for Finance Minister of the Year) விருதை 1993ஆம் ஆண்டிலும் பெற்றார் மன்மோகன் சிங்.

1987இல் இந்திய அரசின் பத்ம விபூஷண் உள்ளிட்ட பல தேசிய, சர்வதேச விருதுகளை பெற்றவர் மன்மோகன் சிங்.

2004 தேர்தல் வெற்றிக்கு பின் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி பிரதமர் பொறுப்பேற்க மறுத்தபின் மன்மோகன் சிங் பிரதமராகத் தேர்வு செய்யப்பட்டார்.

கடந்த சில ஆண்டுகளாக தீவிர அரசியலில் இருந்து ஒதுங்கி இருந்த மன்மோகன்சிங் இன்று காலாமானார்.