முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்கின் உடல்நிலை மோசமடைந்ததையடுத்து இன்று மாலை டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டார்.

92 வயதான அவரது உடல்நிலை கவலைக்கிடமாக இருப்பதாக பிடிஐ செய்தி வெளியிட்டுள்ளது.

முன்னதாக அக்டோபரில், சிங் காய்ச்சலால் பாதிக்கப்பட்டு டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார், பின்னர் சிகிச்சை அளிக்கப்பட்டது. இருப்பினும், பலவீனம் காரணமாக அவர் மீண்டும் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

2024 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் இருந்து மன்மோகன் சிங் உடல்நிலை சரியில்லாமல் இருந்து வந்த நிலையில் பொது நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதை தவிர்த்து வந்தார். கடைசியாக, ஜனவரி 2024 இல், டெல்லியில் உள்ள இந்தியா இன்டர்நேஷனல் சென்டரில் (ஐஐசி) அவரது மகளின் புத்தக வெளியீட்டு விழாவில் அவர் கலந்துகொண்டார்.

 

செப்டம்பர் 26, 2024 அன்று, சிங் தனது 92வது பிறந்தநாளைக் கொண்டாடினார். 1932 இல் பிறந்த மன்மோகன் சிங், முன்னாள் பிரதமர் நரசிம்ம ராவ் தலைமையிலான அரசில் நிதியமைச்சராக இருந்தபோது பல்வேறு பொருளாதார சீர்திருத்தங்களை மேற்கொண்டு உலகளவில் பாராட்டப்பட்டார்.