ராமேசுவரம்:
இந்தியாவின் முன்னாள் ஜனாதிபதியும், ஏவுகணை நாயகன், பாரத ரத்னா அப்துல்கலாமின் முதலாம் ஆண்டு நினைவு நாள் வரும் 27ந்தேதி புதன்கிழமை அனுசரிக்கப்படுகிறது.
அப்துல்கலாம் உடல் அவரது சொந்த ஊரான ராமேசுவரத்தில் உள்ள பேய்க்கரும்பு என்னும் இடத்தில் அடக்கம் செய்யப்பட்டது. அவரது நினைவிடத்துக்கு தினசரி சுற்றுலா பயணிகள் வந்து அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
அப்துல் கலாமின் நினைவை போற்றும் வகையில், நினைவிடம் அமைந்துள்ள இடத்தின் அருகிலேயே அறிவுசார் மையம், அருங்காட்சியகம், மணிமண்டபம் அமைக்க மத்திய அரசு ஏற்கனவே அறிவித்தது.
கலாம் இறந்து ஓராண்டு நிறைவு பெறும் நாளான வரும் 27ந்தேதி பாரத பிரதமர் மோடி ராமேஸ்வரம் வந்து அவரது நினைவிடத்தில் அஞ்சலி செலுத்துகிறார்.
மேலும், அவரது நினைவிடத்தில் மணி மண்டபம் கட்டுவதற்கான அடிக்கல் நாட்டப்படுகிறது. மணி மண்டபத்தில் அப்துல்கலாம் சிலை வைக்கவும் மத்திய அரசு முடிவு செய்துள்ளது.
மோடி வருவதை உறுதிபடுத்தும் வகையில் மத்திய பாதுகாப்பு செயலாளர் ராவ் தலைமையில் அதிகாரிகள் இன்று பேய்கரும்பில் பாதுகாப்பு குறித்து ஆய்வு நடத்தி வருகின்றனர்.