ஜெய்ப்பூர்:
முன்னாள் பிரதமரும், காங்கிரஸ் மூத்த தலைவருமான மன்மோகன் சிங் ராஜஸ்தான் மாநிலத்தில் இருந்து ராஜ்யசபா எம்.பி.யாக தேர்ந்தெடுக்கப்பட உள்ளார். இதற்காக அவர் இன்று தனது வேட்புமனுவை தாக்கல் செய்தார்.
முன்னாள் பிரதமரான மன்மோகன் சிங்கை மீண்டும் எம்.பி.யாக்க காங்கிரஸ் கட்சி ஆர்வம் கொண்டது. இதன் காரணமாக, அவரை தமிழகத்தில் இருந்து எம்.பி.யாக தேர்வு செய்ய முயற்சி மேற்கொள்ளப்பட்டது. அது நிறைவேறாத நிலையில், வேறு மாநிலங்களில் இருந்து அவரை ராஜ்யசபா எம்.பி.யாக்க திட்டமிட்டது. ஆனால் பெரும்பாலான மாநிலங்களில் பாஜக ஆட்சியே உள்ளதால் மன்மோகன் எம்.பி.யாக தேர்வாக முடியாத சூழல் நிலவியது. அதையடுத்து ராஜஸ்தான் மாநில எம்.பி.யாக தேர்வு செய்ய முடிவு செய்யப்பட்டது.
ராஜஸ்தான் மாநிலத்தில் பாஜக சார்பில் ராஜ்யசபா எம்.பி.யாக தேர்வு செய்யப்பட்டிருந்த மதன்லால் சைனி, சமீபத்தில் இறந்ததால் அந்த இடம் காலியானது. காலியாக உள்ள அந்த இடத்துக்கு நடைபெற உள்ள தேர்தலில், காங்கிரஸ் கட்சி சார்பில் போட்டியிட, மன்மோகன் சிங் இன்று வேட்பு மனு தாக்கல் செய்கிறார். மன்மோகன் சிங்கை எதிர்த்து பாஜக உள்பட எந்தவொரு கட்சியும் முன்வராத நிலையில், மன் மோகன் சிங் வெற்றிபெறுவது உறுதியாகி உள்ளது.
முன்னாள் பிரதமரான மன்மோகன் சிங் கடந்த 2004 முதல் 2014 வரை 10 ஆண்டுகள் பிரதமராக பதவி வகித்தார். அவர் கடந்த, 18 ஆண்டுகளாக, அசாம் மாநிலத்திலிருந்து ராஜ்யசபாவுக்கு தேர்வு செய்யப்பட்டு வந்தார். அவரது பதவிக் காலம் சமீபத்தில் முடிவடைந்தது. அதைத் தொடர்ந்து தற்போது ராஜஸ்தானில் இருந்து எம்.பி.,யாக தேர்வு செய்யப்படுகிறார்.
இன்று, காலை ஜெய்ப்பூர் வந்த மன்மோகன் சிங், மாநில முதல்வர் சோக் கெலாட், துணை முதல்வர் சச்சின் பைலட் மற்றும் மூத்த தலைவர்களு டன் சென்று பகல் 1 மணி அளவில் வேட்பு மனுவை தாக்கல் செய்தார். அவரை எதிர்த்து வேறு யாரும் போட்டியிட யாரும் முன்வராத நிலையில், மன்மோகன் சிங் போட்டியின்றி எம்.பி.யாக தேர்வாவது உறுதியாகியுள்ளது.