சென்னை:
தனது திருமணத்தில், நண்பர்களின் ஆசைக்கிணங்க பட்டாக்கத்தியுடன் திருமண கேக் வெட்டிய முன்னாள் பச்சையப்பன் கல்லூரி ‘ரூட்டு தல’ தொடர்பான வீடியோ வைரலான நிலையில், அவரை காவல்துறையினர் அதிரடியாக கைது செய்துள்ளனர்.
கடந்த ஆண்டு பிரபல ரவுடி பினு அரிவாளால் கேக் வெட்டி தனது பிறந்தநாளை கொண்டாடியதைத் தொடர்ந்து, கல்லூரி மாணவர்கள் உள்பட பல ரவுடிகளும் அரிவாளால் கேக் வெட்டி பொதுமக்களை பயமுறுத்தி வருகின்றனர். இவர்களில் பலர் காவல்துறையினரின் கவனிப்புக்கு பிறகு, அமைதியாகி உள்ள நிலையில், அவ்வப்போது சில அலப்பறைகள் அரங்கேறி வருவதும் தொடர்ந்து வருகிறது.

இந்த நிலையில், திருவேற்காடு பகுதியைச் சேர்ந்த புவனேஷ் என்பவருக்கும் நந்தினி என்ற பெண்ணுக்கும் நேற்று முன்தினம் திருமணம் நடைபெற்றது. இந்த திருமணத்தில், மணமகன் புவனேஷ் நண்பர்கள் கொடுத்த 3அடி நீளமுள்ள பட்டாக்கத்தியைக் கொண்டு கேக் வெட்டி தனது திருமண நாளை கொண்டாடினார். அவருடைய நண்பர்களும் பட்டாக்கத்தியுடன் ஆரவாரம் செய்தனர்.
இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானது. அதைத்தொடர்ந்து, சம்பவம் குறித்து விசாரணை நடத்திய காவல்துறையினர், மாமனார் வீட்டில் விருந்துக்கு சென்ற புவனேஷை அலேக்காக தூக்கி வந்தனர்.
அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில், புவனேஷ், பச்சையப்பா கல்லூரியின் முன்னாள் மாணவர் என்பதும், படிக்கும்போது அவர்தான் ‘ரூட்டு தல’யாக இருந்து வந்ததும் தெரிய வந்துள்ளது. பழைய நினைவுகளை அசை போடும் நோக்கில் புவனேஷ் நண்பர்கள், அரிவாளால் கேக் வெட்டச் செய்ததாக கூறப்படுகிறது.

சந்தோஷமான திருமண நாளில், தேவையில்லாமல் அரிவாளை கையில் தூக்கிய புவனேஷ் மற்றும் அவரது தம்பி உள்பட 4 பேரை கைது செய்துள்ளனர். மேலும் அரிவாளுடன் பரபரப்பு ஏற்படுத்திய சிலரை தேடி வருகின்றனர்.
[youtube-feed feed=1]