கவுகாத்தி:
பாரதிய ஜனதா கட்சியில் கடந்த ஆண்டு இணைந்த நாகலாந்து முன்னாள் முதல்வர் கே. எல். சிஷி, பாஜகவில் இருந்து விலகுவதாக அறிவித்து உள்ளார்.
மோடி அரசு கொண்டு வந்துள்ள குடியுரிமை சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து, தான் பாஜகவில் இருந்து விலகுவதாக அறிவித்து உள்ளார். இதுகுறித்து தனது ராஜினாமா கடிதத்தை மாநில பாஜக தலைவர் தெம்ஜென் இம்னா எலாங் லாங்குமாருக்கு அனுப்பி உள்ளார்.
‘அதில், நாகாவில் நீண்டகாலமாக நீடித்துவரும் “நாகா அரசியல் பிரச்சனை”, சர்ச்சைக்குரிய குடியுரிமை (திருத்தம்) மசோதா, 2016, வேலைவாய்ப்பின்மை ஆகியவற்றைப் பெறும் முயற்சியில் நரேந்திர மோடி அரசாங்கம் தோல்வி அடைந்து விட்டது என்றும், மோடியின் ஆட்சியில் நாகலாந்து மாநிலத்தில் வளர்ச்சி இல்லை என்றும் குற்றம் சாட்டி உள்ளார்.
மேலும், நாகா அரசியல் பிரச்சினையை 18 மாதங்களுக்குள் தீர்ப்பதற்கான உத்தரவாதம் வழங்கிய நிலையில், இன்னும் தீர்வு காணப்படவில்லை என்றும், இப்போது, தேர்தல் முடிந்த பிறகு தீர்வு என்று கூறுவது, புத்திசாலித்தனமல்ல என்று குற்றம் சாட்டியவர், இதுபோன்ற நிகழ்வுகள் மக்களை மோகமாக பாதிப்புக்குள்ளாக்கி உள்ளது என்றும் தெரிவித்து உள்ளார்.
மேலும் மத்தியஅரசு கொண்டு வந்துள் குடியுரிமை சட்ட மசோதா மாநிலத்தில் புரட்சியை ஏற்படுத்தி வருகிறது, இது சமூக விரோத நடவடிக்கைகளை பெருக்குவதற்கு வழிவகுக்கும் “என்றும் தெரிவித்துள்ளார்.
மோடியின் ஆட்சியில் “அரசும் அதன் மக்களும் கடுமையான அச்சுறுத்தலுக்கு உள்ளாகி இருப்பதாகவும் தெரிவித்துள்ளவர், எனது ராஜினாமாவை உடனடியாக ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.
ஏற்கனவே காங்கிரஸ் கட்சியில் இருந்து 12 முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்களுடன், கடந்த 2018ம் ஆண்டு ஜனவரி மாதம் பாஜகவில் இணைந்தார். அதைத்தொடர்ந்து நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் கே.எல்.சிஷி படுதோல்வி அடைந்த நிலையில், சில காலம் அமைதியாக இருந்து வந்தார். தற்போது பாஜகவில் இருந்து விலகுவதாக அறிவித்து உள்ளார்.