சென்னை: தமிழ்நாடு வக்ஃப் வாரிய தலைவர் பதவிக்கு கடும் போட்டி எழுந்த நிலையில், கூட்டணி கட்சியைச் சேர்ந்த முன்னாள் எம்.பி. எம். அப்துல்ரகுமான் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
தமிழ்நாடு வக்பு வாரியத் தலைவராக இருந்த அன்வர் ராஜா எம்..பி. இருந்து வந்தார். அவரது பதவிக்காலம் கடந்த ஆண்டு (2020) முடிவடைந்ததும், வக்பு வாரியத்துக்கு புதிய தலைவர் தேர்ந்தெடுக்காமல், வக்பு வாரிய உறுப்பினர்கள் உள்பட அனைவரையம் அதிமுக அரசு கலைத்து விட்டது. இதனால், வக்பு வாரிய தலைவர் பதவி காலியாக உள்ளது.
இந்தப் பதவியைப் பெற தி.மு.க., அ.தி.மு.க-வினரிடையே கடும்போட்டி ஏற்பட்டுள்ளது. வக்பு வாரியத்தில் எம்.பி-க்கள் இரண்டு பேர், எம்.எல்.ஏ-க்கள் இரண்டு பேர், இரண்டு வழக்கறிஞர்கள், சன்னி, ஷியா பிரிவைச் சேர்ந்த இரண்டு பேர், முத்தவல்லிகள் இரண்டு பேர், சமூக ஆர்வலர், ஐ.ஏ.எஸ் அதிகாரி தலா ஒருவர் என 12 பேர் உறுப்பினர்கள் நியமிக்கப்படுவார்கள். இந்த பதவிகளை கைப்பற்ற திமுகவில் உள்ள இஸ்லாமியர்கள் களமிறங்கினர். மேலும் கூட்டணி கட்சியினரும் களமிறங்கினர்.
ஆனால், எதிர்பாராத வகையில், சென்னையில் நடைபெற்ற கூட்டத்தில் தமிழ்நாடு வக்ஃப் வாரிய தலைவராக, கூட்டணி கட்சியைச் சேர்ந்த இந்திய யூனியன் முஸ்லீம் லீக் முதன்மை துணைத்தலைவரும், முன்னாள் எம்.பியுமான எம். அப்துல்ரகுமான் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டார். மேலும் உறுப்பினர்களாக முஸ்லிம் லீக் தலைவர் அப்துல் சமத் மகள் பாத்திமா முசப்பர் , அதிமுக சார்பில் தமிழ்மகன் உசேன், சன்னி உலாமாக்கள் மற்றும் ஷ்யா உலாமாக்கள் பிரிவில் இருந்து தலா ஒருவர் என மொத்தம் 5 உறுப்பினர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
சமீபத்தில், யாரும் எதிர்பாராத வகையில் சிறுபான்மையினர் நல ஆணைய்த்தின் தலைவராக மூத்த காங்கிரஸ் தலைவர் பீட்டர் அல்போன்ஸ் நியமிக்கப்பட்ட நிலையில், தற்போது கூட்டணி கட்சியான இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சி வக்பு வாரிய தலைவர் பதவி வழங்கப்பட்டுள்ளது.