சென்னை: வேலூர் தொகுதி காங்கிரஸ் முன்னாள் எம்எல்ஏ ஞானசேகரன் மீதான சொத்துக்குவிப்பு  வழக்கு முடிவடைந்த நிலையில், தீர்ப்பு தேதி குறிப்பிடாமல் ஒத்தி வைக்கப்பட்டு உள்ளது.

முன்னாள் எம்எல்ஏ  ஞானசேகரன் மற்றும் அவரது மனைவி சொத்து குவிப்பு வழக்கில் விடுவிக்கப்பட்டதை எதிர்த்து லஞ்ச ஒழிப்புத்துறை தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனு மீதான விசாரணை முடிவடைந்த நிலையில், வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி,  வேல்முருகன்  தீர்ப்பை தேதி குறிப்பிடாமல்  ஒத்திவைத்தார்.

வேலூர் தொகுதி முன்னாள் காங்கிரஸ் எம்எல்ஏவாக இருந்தவர் ஞானசேகரன். இவர்  கட்சி மேலிடத்தின்மீதான அதிருப்தி காரணமாக,  அதிலிருந்து விலகி, மூப்பனார் தலைமையிலான  தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியில் இணைந்தார். பின்னர் மூப்பனார் மறைவுக்கு பிறகு, அதில் இருந்து விலகி மறைந்த ஜெயலலிதா முன்னிலையில் அதிமுக இணைந்தார். ஜெ. மறைவுக்கு பிறகு,  டிடிவி தினகரனுக்கு ஆதரவாக செயல்பட்டார். அவர் தொடங்கிய அமமுகவில் இணைந்து அமைப்பு செயலாளராக பணியாற்றி வந்தார். பின்னர் அங்கிருந்தும் விலகி கடந்த 2019ம் ஆண்டு திமுகவில் இணைந்தார். தற்போது திமுக உறுப்பினராக பணியாற்றி வருகிறார்.

டந்த 2006ம் ஆண்டு முதல் 2011ம் ஆண்டு வரை வேலூர் தொகுதி எம்எல்ஏவாக பதவி வகித்த ஞானசேகரன்,  இவர் காங்கிரஸ் கட்சியை சேர்ந்தவர். இவர் எம்எல்ஏவாக இருந்தபோது,  வருமானத்திற்கு அதிகமாக 3 கோடியே 15 லட்சம் ரூபாய் அளவுக்கு சொத்துகள் சேர்த்ததாக லஞ்ச ஒழிப்புத்துறை தரப்பில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த வேலூர் சிறப்பு நீதிமன்றம், கடந்த 2016ம் ஆண்டு குற்றம்சாட்டப்பட்ட முன்னாள் எம்எல்ஏ ஞானசேகரன் மற்றும் அவரது மனைவி மேகலா ஆகியோரை வழக்கிலிருந்து விடுவித்து  உத்தரவு பிறப்பித்திருந்தது.

இந்த உத்தரவை எதிர்த்து லஞ்ச ஒழிப்புத்துறை தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டிருந்தது. இந்த மேல்முறையீட்டு மனு கடந்த சில ஆண்டுகளாக நடைபெற்று வருகிறது. இந்த வழக்கின் இறுதி விசாரணை  நீதிபதி வேல்முருகன் முன்பு நடைபெற்றது.  அப்போது லஞ்ச ஒழிப்புத் துறை தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், வருமான வரி கணக்கில் சொத்துகளை குறிப்பிட்டுள்ளதால் அவை சட்டப்பூர்வமாக சேர்க்கப்பட்ட சொத்துகளாக கருத முடியாது என்றும், முன்னாள் எம்எல்ஏவின் மனைவிக்கு தனிப்பட்ட வருவாய் ஆதாரம் ஏதும் இல்லை என்று கூறப்பட்டது.

இதையடுத்து  முன்னாள் எம்எல்ஏ ஞானசேகரன்   தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், வருமானவரித் துறை கணக்கின் அடிப்படையில் மட்டுமே லஞ்ச ஒழிப்புத் துறை இந்த வழக்கை பதிவு செய்துள்ளது என்றும், வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்ப்பதாக கூறப்படக்கூடிய காலகட்டத்திற்கு முன்பே இருவருக்கும் ஏராளமான சொத்துகள் இருந்ததை கணக்கில் எடுக்கவில்லை.

குற்ற பத்திரிகை தாக்கல் செய்வதற்கு எந்த ஆதாரங்களும் இல்லாத நிலையில் இந்த வழக்கிலிருந்து இருவரையும் சிறப்பு நீதிமன்றம் விடுதலை செய்தது சரி என தெரிவித்தார்.

அனைத்து தரப்பு வாதங்களும் முடிவடைந்தது நிலையில், லஞ்ச ஒழிப்புத்துறை தாக்கல் செய்த மேல்துறையீட்டு மனு மீதான உத்தரவை நீதிபதி வேல்முருகன் தேதி குறிப்பிடா மல் ஒத்திவைத்தார்.