மதுரை: அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் கார் மீது நேற்று (நவம்பர் 10) மாலை ஒரு கும்பல் தாக்குதல் நடத்திய நிலையில், அதுகுறித்து, மதுரை காவல் கண்காணிப்பாளரிடம் முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் புகார் மனு அளித்தார்.
மதுரை மாவட்டம் உசிலம்பட்டியில் நேற்று அதிமுக செயல்வீரர்கள் கூட்டம் நடந்தது. இதில் முன்னாள் அமைச்சர் ஆர் பி உதயகுமார் மற்றும் அவரது ஆதரவாளர்கள் பங்கேற்று இருந்தனர். பின்பு கூட்டம் முடிந்த ஆர்பி உதயகுமார் மற்றும் அவரது ஆதரவாளர்கள் திருமங்கலம் வழியாக வீடுகளுக்கு கார்களில் திரும்பிச் சென்றுகொண்டிருந்தனர். அப்போது உசிலம்பட்டி அருகே அவர்களின் காரை திடீரென சிலர் வழிமறித்துள்ளனர். பின்னர் கார்கள் மற்றும் அதில் இருந்துவர்கள் அடித்து தாக்கியதாக கூறப்படுகிறது. இதில் 4 கார்கள் சேதமடைந்தன. மேலும் 3 பேர் காயமடைந்தனர்.
இதையடுத்து உடனடியாக அவர்கள் மருத்துவமனைக்கு அழைத்துச்செல்லப்பட்டு சிகச்சை பெற்றனர் . விசாரணையில், தாக்குதலில் ஈடுபட்டவர்கள், டிடிவி தினகரனின் அமமுகவினர் தான் என்ற கூறப்படுகிறது. இந்த புகார் தொடர்பாக போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணைய தொடங்கியுள்ளனர்.
இந்த நிலையில் தன்னுடன் காரில் வந்தவர்கள்மீது தாக்குதல் நடத்திய அமமுகவினர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி மதுரை காவல் கண்காணிப்பாளரிடம் முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் இன்று புகார் மனு அளித்தார்.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்தபோது, தங்கள் மீது தாக்குதல் நடத்திய அமமுகவினர் மீது சட்ட நடவடிக்கை வேண்டும். உயிருக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தும் வகையில் தாக்குதல் நடத்தியுள்ளனர். பொது வாழ்க்கையில் ஈடுபடுவோருக்கு பாதுகாப்பு இல்லை. இபிஎஸ்ஸின் வளர்ச்சியை பொறுக்க முடியாமல் காழ்ப்புணர்ச்சியால் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.
இதனிடையே இந்த சம்பவத்தில் அமமுகவினர் 6 பேர் மீது ஐந்து பிரிவுகளின் கீழ் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்துள்ளனர். வாகனங்களை மறித்து நடத்தப்பட்ட தாக்குதலில் காயமடைந்த அதிமுக நிர்வாகி அளித்த புகாரின் பேரில் இந்த வழக்கு பதியப்பட்டுள்ளது.