டெல்லி: புதிய வேளாண் சட்டங்கள் குறித்து அரசு யாரிடமும் கலந்து ஆலோசிக்கவில்லை என்று காங்கிரஸ் மூத்த தலைவரும், முன்னாள் மத்திய அமைச்சருமான ப. சிதம்பரம் விமர்சித்துள்ளார்.
மத்திய அரசின் புதிய வேளாண் சட்டங்களுக்கு எதிராக டெல்லியில் போராடி வரும் விவசாயிகளின் போராட்டம் ஓயவில்லை. பல கட்ட பேச்சு வார்த்தைகளில் எந்த முடிவும் எட்டப்படாததால் போராட்டம் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
இந் நிலையில் இந்த சட்டங்கள் குறித்த மத்திய அரசு யாரிடமும் கலந்து பேச வில்லை என்று முன்னாள் மத்திய அமைச்சர் ப. சிதம்பரம் குற்றம்சாட்டி உள்ளார். இது குறித்து அவர் தமது டுவிட்டர் பதிவில் கூறி உள்ளதாவது:
உண்மை என்னவென்றால் யாரிடமும் கலந்தாலோசிக்கவில்லை. குறிப்பாக மாநில அரசுகளுடன் கலந்தாலோசிக்கவில்லை. வேளாண் சட்டங்கள் அவசர சட்டங்களாக நிறைவேற்றுவதற்கு முன் விரிவான ஆலோசனை நடத்தப்பட்டதாக மத்திய அரசு தெரிவிக்கிறது.
ஆனால் அவை பொய் என்பது ஆர்டிஐ மூலம் தெரியவந்துள்ளது. எதிர்பார்த்த படியே விவசாயிகள், அரசு இடையேயான பேச்சு வார்த்தையும் தோல்வியில் முடிந்தது. சர்ச்சைக்குரிய சட்டங்களை வாபஸ் பெற மத்திய அரசு ஒப்பு கொள்ளாததால், அரசிடம்தான் தவறு இருக்கிறது என்று அவர் குறிப்பிட்டு உள்ளார்.