டெல்லி: கக்கன் பேத்தி ராஜேஷ்வரி உள்ளிட்ட 24 தமிழக காவல்துறை அதிகாரிகளுக்கு 71வது குடியரசு தின விழாவில் குடியரசுத் தலைவர் ராம்நாத் கையால் விருது வழங்கி கவுரவிக்கப்பட்டது.
ஒவ்வொரு ஆண்டும் காவல்துறையில் சிறப்பாக சேவை புரிந்த அதிகாரிகளுக்கு குடியரசுத்தலைவர் விருது வழங்கப்படுவது வழக்கம். காவல்துறை அலுவலர்களின் செயல்பாடு, சாதனைகள் மற்றும் நன்மதிப்பு ஆகியவற்றின் அடிப்படையில் இந்த விருது வழங்கப்படுகிறது.
அந்த வகையில் இந்தாண்டும் குடியரசு தின விழாவில் குடியரசுத் தலைவர் விருது பெறும் காவல்துறை அதிகாரிகளின் பட்டியல் வெளியிடப்பட்டது. அதில், நாடு முழுவதிலும் இருந்து சிறப்பாகப் பணி புரிந்த 660 காவல் அதிகாரிகளின் பெயர்கள் இடம்பெற்றிருந்தது.
அந்தப் பட்டியலில் தமிழக போலீஸ் துறையில் 24 அதிகாரிகளின் பெயர்களும் அடக்கம். அவர்கள் குடியரசுத் தலைவரின் பாராட்டத்தக்க பணிக்கான காவல் விருதுக்காக தேர்வு செய்யப்பட்டிருந்தனர்.
கக்கன் பேத்தி ராஜேஷ்வரியும் இந்த பட்டியலில் இடம்பெற்றார். இன்று கோலாகலமாக நடைபெற்ற 71வது குடியரசு தின விழாவில் குடியரசுத் தலைவர் ராம்நாத் கையால் அவர்களுக்கு விருது வழங்கி கவுரவிக்கப்பட்டது.
விருது பெற்ற ராஜேஷ்வரி, மறைந்த முன்னாள் அமைச்சர் கக்கன், கறைபடியா கைகளின் எஜமானர். கர்ம வீரர் காமராஜரின் அமைச்சரவையில் அமைச்சராக இருந்த கக்கன், மதுரை மாவட்டம் மேலூரில் உள்ள தும்பைப்பட்டி கிராமத்தில் தலித சமுதாயத்தில் பிறந்தவர் ஆவார்.
காமராஜர் காலத்திற்குமுன் ஆட்சி செய்த மூதறிஞர் ராஜாஜி தாழ்த்தப்பட்டவர்கள் கோயிலுக்குள் செல்லக்கூடாது என சட்டம் பிறப்பித்திருந்தார். ஆனால் காமராஜரோ, தான் முதலமைச்சரானதும் தாழ்த்தப்பட்ட சமுதாயத்தைச் சேர்ந்த கக்கனுக்கு இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பதவி வழங்கி கோயிலுக்குள் அவருக்கு பூரணகும்ப ராஜ மரியாதை கிடைக்க வைத்தார்.