சென்னை: மீசை வைத்தவர்கள் எல்லாம் கட்டபொம்மன் கிடையாது பாஜக தலைவர் அண்ணாமலையின் கருத்து குறித்து முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கிண்டல் செய்துள்ளார்.
பாஜக ஐடி விங்கைச் சேர்ந்த பலர் அங்கிருந்து விலகி எடப்பாடி கட்சிக்கு சென்றுள்ள நிலையில், அதுகுறித்து மாநில பாஜக விமர்சனம் செய்தது. சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், என்னுடைய முடிவுகளில் பாரபட்சமும் இருக்காது தலைவர்கள் முடிவெடுப்பதில் நான்கு பேர் கோபித்துக் கொண்டு வெளியே போக தான் செய்வான். அண்ணாமலையான நான் லீடர் லீடர் மாதிரி தான் முடிவெடுப்பேன் மேனேஜர் மாதிரி முடிவெடுக்க மாட்டேன் அது என் கட்சி தொண்டர்களுக்கு அழகல்ல. அவரது கட்சியிலிருந்து முன்னாள் அமைச்சர்கள் வெளியே வந்து திமுகவில் சேரவில்லையா?. அதேபோல் கலைஞர் ஐயாவிடமிருந்து யாரும் வெளியே வரவில்லையா?. எனெனில் அவர்கள் தலைவர்கள்.
நான் இங்கு இட்லி தோசை சாப்பிட வரவில்லை. அம்மையார் ஜெயலலிதா, கருணாநிதி போல் நானும் ஒரு தலைவர். நான் எடுக்கும் முடிவில் உறுதியாக இருக்கிறேன். திராவிட கட்சிகளில் இருந்து பாஜகவுக்கு வந்து பாஜகவை வளர்க்க வேண்டும் என்ற நிலை மாறி பாஜகவில் இருந்து சென்று திராவிட கட்சிகளை வளர்க்க வேண்டும் என்ற நிலை உருவாகியுள்ளது என தெரிவித்துள்ளார்.
அண்ணாமலையின் பேச்சுக்கு எடப்பாடி ஆதரவாளரான முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் பதில் கொடுத்துள்ளார். , “ஜெயலலிதா மாதிரியான தலைவர் என்று சொல்ல யாருக்கும் தகுதி இல்லை.அண்ணாமலை எப்படி தலைவரானார் என்பது குறித்து விமர்சிக்க விரும்பவில்லை என்றவர், ஜெயலலிதா மாதிரியான ஒரு தலைவர் இனி பிறக்க போவது கிடையாது. அந்தளவுக்கு ஆற்றல், நிர்வாகத் திறமை, அரவணைத்து செல்வது, இரும்புக்கரம் கொண்டு செயல்படுவது என அனைத்துக்கும் சொந்தக்காரர் அவர்.
செஞ்சிக் கோட்டை ஏறுகிறவர்கள் எல்லாம் ராஜா தேசிங்கு கிடையாது. மீசை வைத்தவர்கள் எல்லாம் கட்டபொம்மன் கிடையாது” என கிண்டல் அடித்தவர், “தொண்டர்கள் உணர்ச்சிவசப்படும் போது தலைவர் கட்டுப்படுத்த வேண்டும். பாஜகவினரின் இது போன்ற செயல்கள் கண்டனத்திற்குரியது. கட்சியினரை அந்த கட்சியின் தலைவர் கட்டுப்படுத்த வேண்டும். ஒன்னரை கோடி தொண்டர்கள் கொண்ட அதிமுகவினர் கிளர்ந்து எழுந்தால், அவர்களால் ஈடுகட்ட முடியாது என எச்சரித்தார்.
மேலும், கல் வீசினால் உடைவதற்கு அதிமுக ஒன்றும் கண்ணாடி அல்ல, சமுத்திரம், பாஜகவில் இருந்து விருப்பப்பட்டு அதிமுகவில் இணைபவர்களை ஏற்பது அரசியல் பக்குவம். இணைப்பை அரசியல் காழ்ப்புணர்ச்சியோடு அணுக கூடாது. அசுர வேகத்தில் அதிமுக வளர்வதால் பிற கட்சியினர் அதிமுகவில் இணைகின்றனர். பாஜக மட்டுமல்ல திமுக உள்ளிட்ட அனைத்து கட்சிகளில் இருந்தும் அதிமுகவில் இணைகின்றனர். பாஜக உடன் கூட்டணி தொடரும், அதில் மாற்றமில்லை” என்று தெரிவித்தார்.