சென்னை: “அரசியல் நாகரிகம்” குறித்து முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் பரபரப்பான அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில், அரசியல் நாகரிகம் பற்றி எதிர்க்கட்சித் தலைவருக்கு பாடம் எடுக்கும் உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி,  முதலில் அவரது கட்சி தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு கற்றுத் தருவாரா? என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

இதுதொடர்பாக அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் வெளியிட்டுள்ள அறிக்கையில், “கடந்த ஓராண்டு கால விடியா ஆட்சியில் பல்வேறு சமூக விரோதச் செயல்கள் தமிழகத்தில் தலைவிரித்து ஆடுவதை ஒரு பொறுப்புள்ள எதிர்க்கட்சித் தலைவர் என்ற முறையில், அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக இணை ஒருங்கிணைப்பாளர் அண்ணன் திரு. எடப்பாடி K. பழனிசாமி அவர்கள் சுட்டிக் காட்டும்போது எல்லாம்,  இந்த விடியா அரசின் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்  மறுப்பு தெரிவித்து வந்தார்.

பல்வேறு கடத்தல் தொழில்கள் தமிழ் நாட்டை கேந்திரமாகக் கொண்டு நடைபெற்று வந்தாலும், ஏழை, எளிய மக்களுக்கான ரேஷன் அரிசி ஆளுங் கட்சியினரின் துணையோடு வெளிமாநிலங்களுக்கு கடத்தப்படுவதை நாங்கள் அவ்வப்போது சுட்டிக் காட்டினோம். அப்போதெல்லாம் மழுப்பலாக பதில் அளித்த இந்த அரசின் உணவுத் துறை அமைச்சருக்கும், இந்த அரசுக்கும் தலையில் கொட்டு வைப்பது போல், ஆந்திர மாநில முன்னாள் முதலமைச்சர் என்.சந்திரபாபுநாயுடு  கடிதம் ஒன்றை எழுதியுள்ளார்.

அக்கடிதத்தில் அவர், தமிழகத்தில் இருந்து ஆந்திரா மற்றும் கர்நாடகாவிற்கு குறிப்பாக, அவருடைய குப்பம் தொகுதிக்கு ரேஷன் அரிசி கடத்தப் படுவதாகவும், அவை பாலிஷ் செய்யப்பட்டு அதிக விலைக்கு விற்கப்படுவதாகவும் குற்றம் சாட்டியுள்ளார். இந்த அரிசி கடத்தலை உடனடியாகத் தடுக்க வேண்டும் என்றும் இந்த திமுக அரசை வற்புறுத்தியுள்ளார்.

ரேஷன் அரிசி கடத்தல் தொடர்பாக ஆந்திர மாநில முன்னாள் முதலமைச்சர் கூறிய குற்றச்சாட்டை ஒப்புக்கொண்ட உணவுத்துறை அமைச்சர், கடத்தலைத் தடுக்கஎடுக்கப்படும் நடவடிக்கைகளை குறிப்பிடாமல், அம்மாவின் ஆட்சியில் பிடிபட்ட கடத்தல் அரிசியைப் பற்றியும், இவர்கள் ஆட்சியில் பிடிபட்ட கடத்தல் அரிசியையும், நடவடிக்கைகளையும் குறிப்பிட்டுள்ளார்.

அம்மாவின் ஆட்சியின் போது, ரேஷன் பொருட்கள் கடத்தப்படுவது கடுமையாக தடுக்கப்பட்டது; சட்டத்தின் ஆட்சி நிலை நிறுத்தப்பட்டது. தவறுகள் முளையிலேயே கிள்ளி எறியப்பட்டது. ஆனால், இந்த விடியா ஆட்சியில், அரசு அதிகாரிகளும், காவல் துறையினரும் ஆளுங்கட்சியை சேர்ந்தவர்கள் மற்றும் சமூக விரோதிகளால் மிரட்டப்படுகின்றனர். அதனால், இந்த ஆட்சியில் ஏழை, எளிய மக்களின் வயிற்றில் அடிக்கும் வகையில், லட்சக்கணக்கான டன் ரேஷன் அரிசி கடத்தப்படுவது சர்வ சாதாரணமாக நடைபெற்று வருகிறது.

பல லட்சக்கணக்கான டன் ரேஷன் அரிசி தமிழகத்தில் இருந்து பல்வேறு மாநிலங்களுக்கு கடத்தப்படும் நிலையில், ஆந்திர மாநில முன்னாள் முதலமைச்சரின் குற்றச்சாட்டை சுட்டிக்காட்டி, கடத்தலைத் தடுக்க உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி அவர்கள் வெளியிட்ட அறிக்கைக்கு, உணவுத் துறை அமைச்சர் சக்கரபாணி பொறுப்பற்ற முறையில் ஒரு பதிலை தந்துள்ளார். “எதிரிக் கட்சித் தலைவராக செயல்பட வேண்டாம்” என்று முன்னாள் முதலமைச்சருக்கு அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

அமைச்சர்  சக்கரபாணி அவர்களுடைய தலைவரைப்போல், என்றைக்குமே கழக இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி எதிரிக் கட்சித் தலைவராக செயல்பட்டதில்லை. ஆக்கப்பூர்வமான எதிர்க்கட்சித் தலைவராக, இந்த ஆட்சியில் கடந்த ஓராண்டாக நடைபெற்று வந்த சட்டம், ஒழுங்கு சீர்கேடு; போதைப் பொருட்கள் கடத்தல்; நாள்தோறும் நடைபெறும் படுகொலைகள்; கூட்டுப் பாலியல் பலாத்கார குற்றச் சம்பவங்கள்; செயின் பறிப்பு; தனியாக வாழும் முதியோர்களை குறிவைத்துத் தாக்குதல் போன்றவைகளை கண்ணியமான முறையில் நாட்டு மக்களிடம் எடுத்து வைத்து வருகிறார்.

அதேநேரத்தில், பொறுப்புள்ள எதிர்க்கட்சித் தலைவராக அண்ணன் திரு. எடப்பாடி பழனிசாமி அவர்கள் எப்படி செயல்பட வேண்டும் என்று கேட்டுக் கொண்டுள்ள இந்த உணவுத் துறை அமைச்சரின் துறையில், நெல் கொள்முதல் நிலையங்களில் அரங்கேறும் முறைகேடுகள் அவ்வப்போது ஊடகங்கள் மூலமாகவும், செய்தித் தாள்கள் மூலமாகவும் எங்களால் சுட்டிக் காட்டப்பட்டுள்ளது.

மேலும், பொங்கல் பரிசுத் தொகுப்பில் நடைபெற்ற பல கோடி ரூபாய் முறைகேடுகளை ஊடகங்கள் மற்றும் நாளிதழ்கள் வெளிச்சத்திற்குக் கொண்டுவந்த பின்னும் கூட, முறையான நடவடிக்கை இன்று வரை எடுக்கப்படவில்லை.“ஊருக்குத்தான் உபதேசம்” என்ற கொள்கையை விட்டுவிட்டு, எதிர்க்கட்சித் தலைவருக்கு உபதேசம் செய்வதை விட, அரசு விழாக்களிலும், பொதுக்கூட்ட மேடைகளிலும், தனிப்பட்ட முறையிலும், நாகரீகமாக பேசுவது மற்றும் நடந்துகொள்வது எப்படி என்பது குறித்து, அவருடைய கட்சித் தலைவருக்கு பாடம் எடுத்தால், தமிழகத்தில் ஒரு நாகரீகமான, ஆரோக்கியமான, கண்ணியமான அரசியலை முன்னெடுக்கலாம் என்பதைத் தெரிவித்துக்கொள்ள விரும்புகிறேன்.”

இவ்வாறு அதில் குறிப்பிட்டுள்ளார்.