சென்னை: முன்னாள் நீதிபதி கர்ணனின் ஜாமின் மனு ஏற்கனவே முதன்மை அமர்வு நீதிமன்றம் தள்ளுபடி செய்த நிலையில், இன்று சென்னை உயர்நீதி மன்றமும் தள்ளுபடி செய்தது.
ஓய்வுபெற்ற முன்னாள் நீதிபதி கர்ணன், உச்சநீதிமன்ற உயர்நீதிமன்ற முன்னாள், இந்நாள் நீதிபதிகள் மற்றும் அவர்களின் குடும்பங்களுக்கு எதிராக தரக்குறைவான வகையில் பல்வேறு தகவல்களை வீடியோவாக வெளியிட்டு, சமுக வலைதளங்கள், யுடியூப் போன்றவைகளில் பதிவேற்றியிருந்தார். இதை எதிர்த்து, கர்ணன் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என பார் கவுன்சில் சார்பில் தொடரப்பட்ட வழக்கை கடந்த ஆண்டு விசாரித்த நீதிபதி எம். சத்தியநாராயணன் மற்றும் நீதிபதி ஆர்.ஹேமலதா ஆகியோர் அடங்கிய டிவிஷன் பெஞ்ச், கர்ணனின் பதிவுகள், உச்ச நீதிமன்றம் மற்றும் உயர் நீதிமன்றத்தின் முன்னாள் மற்றும் இந்நாள் நீதிபதிகளுக்கு இது சங்கடத்தை ஏற்படுத்துவதோடு மட்டுமல்லாமல் குடும்ப உறுப்பினர் களுக்கும் , குறிப்பாக பெண்களுக்கும் அசெளகரியத்தை ஏற்படுத்தும் என தெரிவித்ததுடன், சமூக வலைதளங்களில் கர்ணன் பேச்சுக்கள் அடங்கிய பதிவுகளை முடக்க, நீதிபதிகள் உத்தரவிட்டனர். தொடர்ந்து விசாரணைகளைத் தொடர்ந்து முன்னாள் நீதிபதி கர்ணன் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.
இந்த நிலையில், தனக்கு ஜாமின் வழங்க வேண்டும் என அவரது தரப்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுமீது நீதிபதி புகழேந்தி விசாரணை நடத்தினார். அதைத் தொடர்ந்து, ஜாமின் மனுவை தள்ளுபடி செய்வதாக உத்தரவிட்டு வழக்கின் விசாரணையை ஒத்தி வைத்தார்.