பணமோசடி குற்றத்தில் ஹேமந்த் சோரன் குற்றவாளி என நம்புவதற்கு எந்த ஆதாரமும் இல்லை என்று ஜார்க்கண்ட் உயர்நீதிமன்றம் கூறியுள்ளது.
2024 நாடாளுமன்ற தேர்தல் நெருங்கிய நிலையில் இந்தியா கூட்டணிக்கு நிர்பந்தம் ஏற்படுத்தும் விதமாக ஜார்க்கண்ட் மாநிலத்தின் அப்போதைய முதல்வர் ஹேமந்த் சோரன் ஜனவரி 31ம் தேதி அமலாக்க இயக்குநரகத்தால் கைது செய்யப்பட்டார்.
இதனையடுத்து முதல்வர் பதவியை ராஜினாமா செய்த ஹேமந்த் சோரன் கடந்த 5 மாதங்களாக சிறையில் இருந்து வருகிறார்.
இந்த நிலையில் ஹேமந்த் சோரனுக்கு ஜாமீன் வழங்கி ஜார்கண்ட் உயர் நீதிமன்றம் இன்று உத்தரவிட்டது.
ராஞ்சி, பாரகெய்ன், சாந்தி நகரில் உள்ள 8.86 ஏக்கர் நிலம் தொடர்பாக பணமோசடி நடைபெற்றதாக அமலாக்கத்துறை கூறிய நிலையில், ஹேமந்த் சோரனுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட வழக்குப் பதிவுகள் மற்றும் குற்றப்பத்திரிகையில் “மேற்படி நிலத்தை கையகப்படுத்துதல் மற்றும் உடைமையாக்குதல் ஆகியவற்றில் அவர் ஈடுபட்டதற்கான ஆதாரம் எதுவும் இல்லை” என்று உயர்நீதிமன்றம் கூறியுள்ளது.
ஹேமந்த் சோரனை ஜாமீனில் விடுவிக்க நீதிமன்றம் உத்தரவிட்டதை அடுத்து இன்று மாலை அவர் ராஞ்சி சிறையில் இருந்து வெளியே வந்தார்.
ராஞ்சி சிறை வாசலுக்கு வந்த அவரது மனைவி கல்பனா சோரன் அவரை வரவேற்ற நிலையில் அங்கு திரண்டிருந்த ஜார்கண்ட் முக்தி மோர்ச்சா தொண்டர்களைப் பார்த்து உற்சாகமாக கையசைத்த ஹேமந்த் சோரன் பின்னர் அங்கிருந்து தலைநகரில் உள்ள தனது இல்லத்துக்கு சென்றார்.