சென்னை: பாலியல் வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள முன்னாள் அமைச்சர் மணிகண்டனை 2 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க காவல்துறையினருக்கு சென்னை உயர் நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.
சின்னத்திரை நடிகை சாந்தினி, தன்னை முன்னாள் அமைச்சர் மணிகண்டன் திருமணம் செய்து கொள்வதாக ஏமாற்றி பழகியதாகவும், 5 ஆண்டுகள் இருவரும் ஒன்றாக குடித்தனம் நடத்தியதாகவும், ஆனால், தன்னை திருமணம் செய்ய மறுப்பதாகவும், கட்டாயப்படுத்தி கருக்கலைப்பு செய்ததாகவும் புகார் கூறினார். இது தொடர்பாக அவர்மீது, பாலியல் வன்கொடுமை உட்பட 6 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து கைது செய்யப்பட்டு, புழல் சிறையில் அடைக்கப்பட்டார்.
இந்த நிலையில் மணிகண்டன் சார்பில் ஜாமீன் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டு உள்ளது. இதற்கிடையில், மணிகண்டனை காவலில் எடுத்து விசாரிக்க அனுமதிக் கோரி காவல்துறை சார்பில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது. மனுவை விசாரித்த உயர்நீதிமன்ற நீதிபதி எம். நிர்மல் குமார் அவரை 2 நாட்கள் போலீஸ் காவலில் எடுத்து விசாரணை நடத்த அனுமதி வழங்கியுள்ளது.
மேலும், மணிகண்டனை காவலில் வைத்து விசாரிக்க அனுமதி மறுத்து சைதாப்பேட்டை நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை ரத்து செய்து சென்னை உயர் நீதிமன்றம் இந்த உத்தரவைப் பிறப்பித்துள்ளது. ஜூலை 3, 4 ஆம் தேதிகளில் மதுரையில் உள்ள அவரது வீட்டிற்கு அழைத்து சென்று விசாரணை நடத்தவும் நீதிமன்றம் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.